ரம்ஜான் பண்டிகை அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து


ரம்ஜான் பண்டிகை அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து
x
தினத்தந்தி 25 Jun 2017 10:30 PM GMT (Updated: 2017-06-26T02:08:57+05:30)

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு புதுவை மாநில அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

புதுச்சேரி,

சபாநாயகர் வைத்திலிங்கம் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:–

தியாகம், அன்பு, ஒன்றுமை, சகோதரத்துவம், பகிர்ந்துண்ணுதல், ஏழைகளுக்கு உதவி செய்தல் இவை அனைத்தும் இஸ்லாமிய மக்களின் மனிதநேய பண்புகளாகும். புதுவை மாநிலத்தில் உள்ள இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் வேற்றுமையில் ஒற்றுமை உணர்வோடு வாழ்ந்து நமது புதுவை மாநிலத்தில் வளர்ச்சிக்கு அயராது பாடுபட்டு வருகின்றனர் என்பதை யாராலும் மறுக்கவோ, மறைக்கவோ முடியாது.

இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் மற்றும் அவர்கள் குடும்பங்களின் வாழ்வில் வளம் ஏற்பட்டு, நலன்கள் பலவும் பெற்று இன்புற்று வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டி ரம்ஜான் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ராதாகிருஷ்ணன் எம்.பி.

புதுவை என்.ஆர்.காங்கிரஸ் எம்.பி. ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:–

ஐம்புலன்களையும் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் நோன்பு, மனித மனங்களில் புனிதத்தை பூக்க வைக்கிறது. ஏழை எளியவர்களுக்கு வழங்கிட வேண்டிய ஏழை வரியை உவப்புடன் ஐக்காத் ஆக வழங்கி ஈந்துவக்கும் இன்பம் எய்தும் ஈதுல் பெருநாள் இந்நாள்.

இஸ்லாம் சமுதாயத்திற்கு மட்டுமல்லாமல் மனித சமுதாயம் அனைத்திற்கும் பொருந்தும் வாழ்க்கை நெறியைப் போதித்தவர் நபிகள் நாயகம். அருள் மறையாம் திருமறை குர்ஆன் அருளப்பட்ட இந்தப் புனித மாத்தில் நோன்பிருக்க வேண்டுமென்பது இறைவனின் கட்டளையாகும். நோன்பிருப்பதன் மூலம் பொறுப்புகளை சுமக்கும் ஆற்றலையும், சிந்திப்பதற்கான சந்தர்ப்பத்தையும், கட்டுப்படுத்திக் கொள்கின்ற சக்தியையும் இந்த ரமலான் மாதத்தில் இஸ்லாமியர்கள் பெறுகிறார்கள். இந்த அற்புத திருநாளில் அனைவரின் வாழ்விலும் அன்பு, அமைதி, இரக்கம், கருணை, ஒற்றுமை உணர்வு, சகோதரத்துவம் போன்ற நற்பண்புகள் மேலோங்க உறுதி ஏற்போம்.

புனித நோன்பினை மேற்கொண்டு இறை உணர்வுடன் ஈகைத் திருநாளைக் கொண்டாடும் இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் என் இனிய ஈகைத் திருநாள் நல்வாழ்த்துக்களை மீண்டும் ஒருமுறை தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

அன்பழகன்

புதுவை அ.தி.மு.க. சட்டமன்ற தலைவர் அன்பழகன் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:–

மகத்தான ரமலான் மாதத்தில் இறை நோன்மை கடைபிடித்து தனது இறை கடமையை செய்த அத்தனை இஸ்லாமிய சமுதாய மக்களுக்கும் ரம்ஜான் நல்வாழ்த்துக்களை அ.தி.மு.க. சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன். அன்பு, பணிவு, பாசம், தியாகம், ஈகை, ஏழைகளுக்கு உதவி புரிதல் மனிதநேயம் உள்ளிட்ட அனைத்து நற்பண்புகளையும் கொண்டுள்ள மனித சமுதாயத்தில் பிறருக்கு உதவி புரிந்து வாழ்தல் ஒவ்வொரு மனிதனின் தலையாய கடைமையாகும்.

இந்த நன்னாளில் மத, இனரீதியான வேற்றுமைகளை களைந்து, அனைவரும் சகோதர பாசத்துடன் நாட்டின் முன்னேற்றத்திற்கும் மனித சமுதாய ஒற்றுமைக்கும் வழிகாட்டுவோம்.

இவ்வாறு அந்த வாழ்த்து செய்தியில் கூறப்பட்டுள்ளது.

சிவா

புதுவை தெற்கு மாநில தி.மு.க. அமைப்பாளர் சிவா எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:–

ஈகை திருநாளாம் ரம்ஜான் பெருநாளை மகிழ்வுடன் கொண்டாடும் இஸ்லாமிய பெருமக்கள் அனைவருக்கும் எனது உளம் கனிந்த ரம்ஜான் நல்வாழ்த்துக்கள். ரம்ஜான் மாதம் முழுவதும் பசி, தாகம், இச்சைகளை கட்டுப்படுத்தி நோன்பு நோற்ற இஸ்லாமியர்கள் இறைவனுக்கு நன்றி செலுத்தும் விதமாகவும், மகிழ்ச்சியை கொண்டாடவும் ஈகைப் பெருநாளை கொண்டாடுகின்றனர்.

தனி மனித ஒழுக்கம், எளியோர், வலியோர் பேதமின்றி அனைவரையும் நேசிக்க வேண்டும் போன்ற வாழ்வியல் நெறிகளை இந்த மண்ணுலகுக்கு வழங்கிய மகான்களில் ஒருவர்தான் நபிகள் நாயகம். அவரது போதனைகளை பின்பற்றி வாழும் இஸ்லாமிய மக்களுக்கு மீண்டும் எனது இனிய ரமலான் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதேபோல் எம்.எல்.ஏ.க்கள் அனந்தராமன், வையாபுரி மணிகண்டன், முன்னாள் அமைச்சர் ராஜவேலு, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் ஓம் சக்தி சேகர், ஆனந்து ஆகியோரும் ரம்ஜான் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.


Next Story