விவசாயி கொலை வழக்கில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் கைது


விவசாயி கொலை வழக்கில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் கைது
x
தினத்தந்தி 1 July 2017 5:18 AM IST (Updated: 1 July 2017 5:18 AM IST)
t-max-icont-min-icon

செய்யாறு அருகே விவசாயி கொலை வழக்கில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

செய்யாறு,

செய்யாறு அருகே விவசாயி கொலை வழக்கில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:–

செய்யாறை அடுத்த பாப்பந்தாங்கல் கிராமத்தை சேர்ந்தவர் தயாளன் (வயது 45), விவசாயி. இவருக்கும் அதே கிராமத்தை சேர்ந்த வடிவேல் என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. இந்த நிலையில் கடந்த 28–ந்தேதி இரவு தயாளன் தன்னுடைய நிலத்திற்கு சென்ற போது அங்கு வடிவேல் மகன் வாசு, தனது நண்பர்களுடன் மது அருந்திக் கொண்டிருந்தார்.

இதுகுறித்து தயாளன் கேட்டபோது வாசும், அவரது நண்பர்களும் சேர்ந்து தயாளனை தாக்கியுள்ளனர். இதனையடுத்து தயாளன் குடும்பத்தினர் வடிவேல் வீட்டிற்கு சென்று கேட்டபோது வடிவேல் மற்றும் அவரது மனைவி மல்லிகா, மகன்கள் விநாயகம், வாசு மற்றும் சிலர் தயாளன் குடும்பத்தினரை தாக்கி, கத்தியால் வெட்டியுள்ளனர்.

அதைத் தொடர்ந்து தயாளனின் மனைவி புஷ்பா, மகன்கள் முருகன், முத்து மற்றும் உறவினர்கள் வெங்கடேசன், தாமோதரன் ஆகியோர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். தயாளன் மட்டும் வடிவேல் குடும்பத்தில் சிக்கி கொண்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் வடிவேல் வீட்டிற்கு அருகில் உள்ள வயல்வெளி கிணற்றில் கத்திவெட்டு காயங்களுடன் தயாளன் பிணமாக மிதந்து கிடந்தார்.

இதுகுறித்து மோரணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, வடிவேல் (60), மல்லிகா (52), விநாயகம் (29), வாசு (24) ஆகிய 4 பேரை கைது செய்தனர்.


Next Story