இளம் பெண்ணை உயிரோடு எரித்துக்கொல்ல முயற்சி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டாரா? போலீசார் விசாரணை
பண்ருட்டி அருகே இளம் பெண்ணை உயிரோடு எரித்துக்கொல்ல முயற்சி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டாரா? போலீசார் விசாரணை
பண்ருட்டி,
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ளது கானஞ்சாவடி கிராமம். இங்குள்ள பஸ்நிறுத்தம் அருகே முந்திரி தோப்பு ஒன்று இருக்கிறது. இந்த தோப்புக்குள் இருந்து உடலில் பலத்த தீக்காயங்களுடன் ஒரு இளம்பெண் ஓடிவந்தார். இதை பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தவர்கள் பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.
பஸ்நிறுத்தம் அருகே வந்த போது அந்த பெண் நிலைகுலைந்து மயங்கி கீழே விழுந்தார். அவர் அணிந்திருந்த ஆடைகள் தீயில் எரிந்த நிலையில் குற்றுயிரும், குலையுயிருமாய் இருந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலமாக சிகிச்சைக்காக பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுபற்றி தகவல் அறிந்த காடாம்புலியூர் போலீசார், மருத்துவமனைக்கு விரைந்து சென்று அந்த பெண்ணிடம் விசாரித்தனர். அப்போது அவர் தனது பெயர் சக்தி (வயது 23) என்றும், விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் அருகே மேலவல்லி கிராமம் காந்திநகரை சேர்ந்தவர் என்றும் தெரிவித்தார்.
தனக்கும் அமரன்நாராயணன் என்பவருக்கும் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு திருமணம் நடைபெற்றது என்றும், தனது கணவர் 4 நாட்களுக்கு முன்பு இறந்து விட்டார் என்றும் போலீசாரிடம் தெரிவித்தார்.
மேலும் அவர் போலீசாரிடம் கூறுகையில், கணவர் இறந்ததால், பண்ருட்டி வருவதற்காக சங்கராபுரம் பஸ் நிலையத்தில் அழுதபடி நின்று கொண்டிருந்தேன். அப்போது காரில் வந்த 4 பேர், நாங்கள் உங்களது கணவருக்கு தெரிந்தவர்கள். நாங்களும் பண்ருட்டிக்கு தான் செல்கிறோம், அங்கு உங்களை இறக்கி விட்டுவிடுகிறோம் என்று கூறினார்கள். அவர்களை நம்பி, நான் காரில் ஏறினேன்.
இந்த நிலையில் நான் கண் விழித்து பார்த்த போது, எனது உடலில் தீ பற்றி எரிந்தது. வலி தாங்க முடியால் நான் கூச்சலிட்டேன். இதையடுத்து அந்த 4 பேரும் என்னை விட்டுவிட்டு தப்பி சென்றுவிட்டார்கள். இதன் பின்னர் தான் நான் ஒரு முந்திரி தோப்பு பகுதியில் இருப்பதும், எனது மீது அந்த 4 பேரும் டீசலை ஊற்றி தீ வைத்து எரித்து கொலை செய்ய முயன்றதும் எனக்கு தெரியவந்தது என்று கூறினார்.
இதற்கிடையே இந்த சம்பவம் குறித்து அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் நேரில் வந்து, நடந்த சம்பவம் பற்றி விசாரணை மேற்கொண்டார்.
தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறுகையில், தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பெண் கூறிய தகவலின் படி விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு இதுகுறித்து கதவல் தெரிவித்துள்ளோம், அவர்களும் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
சங்கராபுரம் பஸ் நிலையத்திலிருந்து அந்த பெண் கடத்தப்பட்டு வந்ததாக முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. சிகிச்சை பெற்று வரும் அந்த பெண்ணிடம் முழுமையான விசாரணை நடந்து முடிந்த பின்னர் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.
இதனிடையே அந்த பெண் கூறியதன் படி, காடாம்புலியூர் போலீசார் சங்கராபுரம் போலீசாரை தொடர்பு கொண்டு விசாரித்தனர். அப்போது இளம்பெண் சக்தி கூறிய ஊர் அந்த பகுதியில் இல்லை என்பது தெரியவந்தது. இதனால் அவர் கூறிய தகவல்கள் அனைத்தையும் உறுதிபடுத்த முடியாமல் போலீசார் குழப்பத்தில் இருக்கிறார்கள். இந்நிலையில் தீக்காயமடைந்த அந்த பெண் மேல் சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர்.
இளம் பெண்ணை 4 பேரும் சேர்ந்து கடத்தி வந்து அவருக்கு போதை பொருளை கொடுத்து, பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு, பின்னர் டீசல் ஊற்றி அவரை எரித்து கொலை செய்ய முயன்றார்களா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என்று பல்வேறு கோணங்களில் காடாம்புலியூர் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
காரில் கடத்தி வரப்பட்ட பெண் தற்போது கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது, அவர் கூறும் பதில்கள் அனைத்தும் முன்னுக்கு பின் முரணாக உள்ளது. இது போலீசாருக்கு பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
இளம் பெண் சக்தி சுயநினைவு இல்லாமல் இருப்பதாவும், தீவிர சிகிச்சை பெற்ற பின்னரே அவர் மீண்டும் தன்னிலைக்கு திரும்புவார். அதுவரையில் இந்த பிரச்சினையில் தொடர்புடையவர்களை அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்படும் என்று போலீஸ் தரப்பில் தெரிவித்தனர். மேலும் அந்த பெண் கூறிய தகவலில் உண்மை தன்மை இருக்கிறதா, அவர் எதற்காக பண்ருட்டி வந்தார் என்பது குறித்தும் விசாரணை நடந்து வருகிறது. தொடர்ந்து, கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சக்தியை போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.