பொதுமக்கள் மீது தக்காளி வீசி ரகளை: பிடித்துச்சென்ற போலீஸ் ஏட்டுவை சரமாரி தாக்கிய வாலிபர் கைது–3


பொதுமக்கள் மீது தக்காளி வீசி ரகளை: பிடித்துச்சென்ற போலீஸ் ஏட்டுவை சரமாரி தாக்கிய வாலிபர் கைது–3
x
தினத்தந்தி 3 July 2017 3:13 AM IST (Updated: 3 July 2017 3:13 AM IST)
t-max-icont-min-icon

சேலத்தில் பொதுமக்கள் மீது அழுகிய தக்காளிகளை வீசி ரகளையில் ஈடுபட்ட 4 பேர் கும்பலை போலீசார் பிடித்தனர். போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச்சென்ற ஏட்டுவை அந்த கும்பல் சரமாரியாக தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

சேலம்,

சேலம் டவுன் போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணிபுரிந்து வருபவர் கோவிந்தன் (வயது 45). இவர் சம்பவத்தன்று இரவு 2 ஊர்க்காவல் படை வீரர்களுடன் ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது அவருக்கு, கடைவீதி பகுதியில் ஆட்டோவில் இருந்து கொண்டு 4 பேர் கும்பல் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் மீது அழுகிய தக்காளியை வீசி ரகளையில் ஈடுபட்டு வருவதாக தகவல் வந்தது.

இதையடுத்து போலீஸ் ஏட்டு கோவிந்தன் ஊர்க்காவல் படை வீரர்களுடன் அங்கு சென்றார். அப்போது 4 பேர் அழுகிய தக்காளியை வீசி கொண்டிருந்தனர். இதை பார்த்த அவர் உடனே ஆட்டோவில் இருந்த 4 பேரையும் பிடித்தார். இதையடுத்து ஊர்க்காவல் படை வீரர்களை அங்கு பாதுகாப்பு பணியில் நிறுத்திவிட்டு, கோவிந்தன் மட்டும் 4 பேரையும் விசாரணைக்காக போலீஸ் நிலையத்துக்கு ஆட்டோவில் அழைத்து சென்றார்.

ஏட்டு மீது தாக்குதல்

அந்த ஆட்டோ கன்னிகா பரமேஸ்வரி கோவில் அருகே சென்றபோது திடீரென அவர்கள் போலீஸ் ஏட்டு கோவிந்தனை சரமாரியாக தாக்கினர். பின்னர் அவர்கள் ஏட்டுவை கீழே தள்ளிவிட்டு அங்கிருந்து ஆட்டோவில் தப்பி சென்று விட்டனர். பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது.

அதன்பேரில் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் கண்ணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். போலீசார் நடத்திய விசாரணையில், ஏட்டுவை தாக்கியது டவுன் பகுதியை சேர்ந்த உஸ்மான், ஜாபர், நவேஸ், அம்மாபேட்டையை சேர்ந்த ரஞ்சித் என்பது தெரியவந்தது. இவர்கள் மீது கொலை மிரட்டல் விடுத்தல், அரசு அலுவலரை பணி செய்யவிடாமல் தடுத்தல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

ஒருவர் கைது

இந்தநிலையில் போலீஸ் ஏட்டுவை தாக்கிய ரஞ்சித்தை (வயது 22) நேற்று போலீசார் கைது செய்தனர். மேலும் ரஞ்சித்தின் ஆட்டோவையும் அவர்கள் பறிமுதல் செய்தனர். மற்ற 3 பேரையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.



Next Story