சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுக்கு பிறகும் மூடாததால் சிவமொக்கா மாவட்டத்தில் 93 மதுக்கடைகளுக்கு ‘சீல்’


சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுக்கு பிறகும் மூடாததால் சிவமொக்கா மாவட்டத்தில் 93 மதுக்கடைகளுக்கு ‘சீல்’
x
தினத்தந்தி 3 July 2017 4:10 AM IST (Updated: 3 July 2017 4:10 AM IST)
t-max-icont-min-icon

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுக்கு பிறகும் மூடாததால் சிவமொக்கா மாவட்டத்தில் 93 மதுக்கடைகளுக்கும் ‘சீல்’ வைத்து கலால் துறை அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர்.

சிவமொக்கா,

நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் இருந்து 500 மீட்டர் தொலைவில் உள்ள மதுக்கடைகளை மூட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. மேலும் மதுக்கடை உரிமையாளர்களுக்கு காலஅவகாசம் கொடுக்கும் வகையில் கடந்த மாதம் (ஜூன்) 30–ந்தேதி வரை சுப்ரீம் கோர்ட்டு கெடு விதித்தது.

இந்த நிலையில் அந்த கெடு தற்போது முடிந்துள்ளது. இதனால் கர்நாடகத்தில் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகள் மூடப்பட்டு வருகின்றன. மேலும் ஒருசில கடைகளங வேறு பகுதிக்கும் இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றன.

மதுக்கடைகள் திறப்பு

அதேபோல, சிவமொக்கா மாவட்டத்திலும் தேசிய நெடுஞ்சாலையையொட்டி அமைந்துள்ள 104 மதுக்கடைகள் கடந்த 1–ந்தேதி முதல் மூடப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதில், சிவமொக்கா தாலுகாவில் 35 கடைகளும், பத்ராவதி தாலுகாவில் 16 கடைகளும், சாகர் தாலுகாவில் 17 கடைகளும், தீர்த்தஹள்ளி தாலுகாவில் 14 கடைகளும், ஒசநகர் தாலுகாவில் 10 கடைகளும், சிகாரிபுரா தாலுகாவில் 7 கடைகளும், சொரப் தாலுகாவில் 5 கடைகளும் அடங்கும். இவற்றில் 93 கடைகள் மூடப்படுகின்றன. 11 கடைகள் வேறு இடத்துக்கு மாற்றப்படுகின்றன.

ஆனால், சுப்ரீம் கோர்ட்டு காலஅவகாசம் கொடுத்தும் சிவமொக்கா மாவட்டத்தில் உள்ள மதுக்கடை உரிமையாளர்கள் யாரும் பின்பற்றவில்லை. கடந்த 1–ந்தேதியும் வழக்கம்போல 93 மதுக்கடைகளும் (மாற்றப்பட உள்ள 11 மதுக்கடைகளை தவிர) திறக்கப்பட்டிருந்தன. இதுகுறித்து கலால் துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

93 மதுக்கடைகளுக்கு ‘சீல்’

அதன்பேரில் கலால் துறை துணை சூப்பிரண்டு தஷ்ஜில் உல்லா சையத் தலைமையிலான அதிகாரிகள், நேற்று முன்தினம் மாவட்டம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து, சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுக்கு பிறகும் மூடாத 93 கடைகளை பூட்டி ‘சீல்’ வைத்தனர்.

மேலும் 11 மதுக்கடைகளை எந்தப்பகுதியில் வைக்க வேண்டும் என்பது குறித்து விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.



Next Story