22 ஆண்டுகளாக குடும்பமே கொத்தடிமைகளாக இருக்கிறோம் கலெக்டரிடம் பெண் புகார் மனு
குடியாத்தம் அருகே செங்கல் சூளையில் 22 ஆண்டுகளாக குடும்பமே கொத்தடிமைகளாக இருக்கிறோம் என்று கலெக்டரிடம் பெண் புகார் மனு கொடுத்து உள்ளார்.
வேலூர்,
குடியாத்தம் அருகே செங்கல் சூளையில் 22 ஆண்டுகளாக குடும்பத்தினர் கொத்தடிமையாக இருந்து தப்பிவந்ததாகவும், செங்கல்சூளை உரிமையாளர் பாலியல் தொந்தரவு கொடுத்ததாகவும் குறைதீர்வுநாள் கூட்டத்தில் கலெக்டரிடம் பெண் புகார் மனு அளித்துள்ளார்.
குறைதீர்வு நாள் கூட்டம்வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் ராமன் தலைமையில் நேற்று மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை கொடுத்தனர். வீட்டுமனை பட்டா, குடிநீர் வசதி, வேலை வாய்ப்பு, முதியோர் உதவித்தொகை, ரேஷன் கார்டு, திருமண உதவி உள்பட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 451 மனுக்களை கொடுத்தனர்.
மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர் அவற்றை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடத்தில் கொடுத்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
மேலும் வருவாய்த்துறையில் 13 நபர்களுக்கு கருணை அடிப்படையில் தற்காலிக இளநிலை உதவியாளர், கிராம நிர்வாக அலுவலர், கிராம உதவியாளர் பணியிடங்களுக்கான பணி நியமன ஆணை, காட்பாடி தாலுகா குப்பத்தா மோட்டூர் கிராமத்தை சேர்ந்த கதிர்வேல் என்பவர் விபத்தில் மரணமடைந்ததை தொடர்ந்து அவருடைய மனைவி அமுல் என்பவரிடம் விபத்து நிவாரண நிதியாக ரூ.1 லட்சத்திற்கான காசோலை, நாட்டறம்பள்ளி அருகே மின்னல் தாக்கி லட்சுமணன் என்ற சிறுவன் மரணமடைந்ததை தொடர்ந்து அவருடைய தந்தை சிவக்குமாரிடம் இயற்கை இடற்பாடு நிவாரணத்தொகையாக ரூ.4 லட்சத்திற்கான காசோலை ஆகியவற்றையும் கலெக்டர் ராமன் வழங்கினார்.
குடியாத்தம் அருகே உள்ள எர்த்தாங்கல் கிராமத்தை சேர்ந்த சாந்தி (வயது 50) என்ற பெண் குடும்பத்துடன் வந்து கலெக்டரிடம் புகார் மனு அளித்தார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:–
கொத்தடிமைகளாகஎனது கணவர் ராதாகிருஷ்ணன் (68). எங்களுக்கு கார்த்திக் (26), பார்த்திபன் (13) ஆகிய 2 மகன்களும், காவேரி (23) என்ற மகளும் உள்ளனர். நாங்கள் கடந்த 22 ஆண்டுகளாக எர்த்தாங்கலில் உள்ள ஒரு செங்கல் சூளையில் கொத்தடிமைகளாக வேலை செய்து வருகிறோம். எங்கள் மூத்த மகன் மற்றும் மகளுக்கு திருமணம் நடந்து விட்டது. மகள் திருமணத்திற்காக செங்கல் சூளை உரிமையாளரிடம் ரூ.20 ஆயிரம் கடன் வாங்கினோம். இதற்கு வட்டியாக தற்போது ரூ.1½ லட்சம் தரவேண்டும் என்று கூறி உரிமையாளர் மிரட்டினார்.
மகன் திருமணமான பிறகும், செங்கல் சூளையில் மருமகளோடு கொத்தடிமையாக நடத்தப்பட்டார். மேலும் எனக்கு செங்கல் சூளை உரிமையாளர் அடிக்கடி பாலியல் தொந்தரவு கொடுத்தார். எங்களை விட்டுவிடும் படி கூறினால் அடியாட்களை வைத்து மிரட்டல் விடுத்தார்.
இந்த நிலையில், அவரிடம் இருந்து குடும்பத்தோடு தப்பி வந்துவிட்டோம். எங்களுக்கு பாதுகாப்பு இல்லை. கணவருடன் தனியாக வசிக்கும் எங்கள் மகளிடம் சென்று நாங்கள் எங்கு இருக்கிறோம் என்று கேட்டு மிரட்டுகிறார்கள். எங்களால் மீண்டும் அந்த ஊருக்கு செல்ல முடியவில்லை. மீண்டும் சென்றால் எங்கள் உயிருக்கு பாதுகாப்பு இல்லை. எனவே, செங்கல் சூளை உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
டாஸ்மாக் கடையை மூடவேண்டும்அரக்கோணம் தாலுகா ஜடேரி கிராமத்தின் அருகில் உள்ள அருந்ததி பாளையத்தை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்துள்ள மனுவில் எங்கள் கிராமத்தில் படித்த இளைஞர்களோ, அரசு ஊழியர்களோ கிடையாது. அனைவரும் கூலிவேலைக்கு செல்பவர்கள். எங்கள் கிராமத்தில் குடியிருப்பு பகுதியில் தற்போது டாஸ்மாக் கடை திறக்கப்பட்டுள்ளது. இதனால் பலர் மதுகுடித்து குடும்பத்தில் பிரச்சினை ஏற்பட்டு வருகிறது.
பக்கத்து கிராமங்களை சேர்ந்தவர்கள் எங்கள் பகுதிக்கு வந்து மதுகுடிப்பதால் பள்ளிகளுக்கு செல்லும் மாணவிகளுக்கு இடையூறாக இருக்கிறது. எனவே டாஸ்மாக் கடையை நிரந்தரமாக மூட நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கூறி உள்ளனர்.
கூண்டு அமைத்து சோதனைகலெக்டர் அலுவலகத்திற்கு மனுகொடுக்க வரும் பெண்கள் மண்எண்ணெய் போன்ற பொருட்களை தங்கள் சேலைக்குள் வைத்து மறைத்து எடுத்துவந்து விடுகின்றனர். இதனால் நேற்று நடந்த குறைதீர்வு நாள் கூட்டத்திற்கு வந்த பெண்களை சோதனை செய்வதற்கு கலெக்டர் அலுவலக வளாகத்தில் கூண்டு அமைக்கப்பட்டிருந்தது. பெண் போலீசார், மனுகொடுக்க வந்த பெண்களை அந்த கூண்டுக்குள் அழைத்துசென்று சோதனை செய்து அனுப்பினர்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் செங்கோட்டையன், உதவி கலெக்டர் செல்வராஜ், அலுவலக மேலாளர் பாலகிருஷ்ணன் மற்றும் அனைத்துத்துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.