காரைக்குடி அருகே ரெயில் தண்டவாளத்தில் அமர்ந்து பொதுமக்கள் போராட்டம்
காரைக்குடி அருகே ரெயில் தண்டவாளத்தில் அமர்ந்து பொதுமக்கள் போராட்டம் அகற்றப்பட்ட சாலையை மீண்டும் அமைக்க வலியுறுத்தல்
காரைக்குடி,
காரைக்குடி–மயிலாடுதுறை இடையே அகல ரெயில் பாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணியின்போது கவுல்கொல்லை என்ற இடத்தில் ஏற்கனவே இருந்த ரெயில்வே கேட் மூடப்பட்டு, அந்த வழியாக சென்ற சாலையும் அகற்றப்பட்டது. இதனால் அப்பகுதி மக்கள் கண்டனூர், புதுவயல் செல்லவும், பள்ளி, கல்லூரி செல்லவும், கோவில்களுக்கு செல்லவும் வேறு பாதையில் சுற்றி செல்ல வேண்டும் அல்லது தண்டவாளத்தை ஆபத்தான முறையில் கடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதேபோல் அப்பகுதியில் உள்ள மயானத்திற்கும் இந்த ரெயில் தண்டவாளத்தை கடந்து தான் செல்ல வேண்டும். தற்போது அதற்கும் வழியில்லாமல் போய்விட்டது.
இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் ரெயில்வே அதிகாரிகளுக்கு புகார் மனு கொடுத்தனர். ஆனால் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இந்தநிலையில் நேற்று கவுல்கொல்லை பகுதி பொதுமக்கள், சங்கராபுரம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மாங்குடி, புதுவயல் நகர காங்கிரஸ் தலைவர் அமீர் ஆகியோர் தலைமையில், அகல ரெயில் பாதை அமைக்கும் பணியின்போது கவுல்கொல்லை பகுதியில் அகற்றப்பட்ட சாலையை மீண்டும் அமைக்கக் கோரி ரெயில் தண்டவாளத்தில் அமர்ந்து போராட்டம் நடத்தினர்.
போராட்டத்தின் போது தண்டவாளத்தில் ஜல்லிக்கற்கள் ஏற்றி வந்த லாரியையும் அவர்கள் மறித்து போராட்டத்தை தொடர்ந்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த காரைக்குடி தாசில்தார் கண்ணன் மற்றும் ரெயில்வே அதிகாரிகள் போராட்டம் நடத்திய மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதுகுறித்து மேல் அதிகாரிகளிடம் தெரிவித்து சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்ததை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.