காவிரி பிரச்சினையில் தமிழக அரசின் மனுவுக்கு சுப்ரீம் கோர்ட்டில் கர்நாடக வக்கீல்கள் தக்க பதில் அளிப்பார்கள் சித்தராமையா பேட்டி
‘‘காவிரி பிரச்சினையில் தமிழக அரசின் மனுவுக்கு சுப்ரீம் கோர்ட்டில் கர்நாடக வக்கீல்கள் தக்க பதில் அளிப்பார்கள்’’ என்று சித்தராமையா கூறினார்.
பெங்களூரு,
‘‘காவிரி பிரச்சினையில் தமிழக அரசின் மனுவுக்கு சுப்ரீம் கோர்ட்டில் கர்நாடக வக்கீல்கள் தக்க பதில் அளிப்பார்கள்’’ என்று சித்தராமையா கூறினார்.
பெங்களூருவில் கலவரம்கர்நாடகத்தில் கடந்த ஆண்டு பருவமழை போதிய அளவு பெய்யவில்லை. இதனால் காவிரி படுகையில் உள்ள அணைகள் நிரம்பவில்லை. இதனால் தமிழகத்திற்கு காவிரி நீரை கர்நாடக அரசு திறக்கவில்லை. இதையடுத்து தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டுக்கு சென்றது. சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின் பேரில் காவிரியில் தண்ணீர் திறந்துவிடப்பட்டது.
இதை கண்டித்து கர்நாடகத்தில் போராட்டம் வெடித்தது. பெங்களூருவில் பயங்கர கலவரம் உண்டானது. இது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. துணை ராணுவப்படையினர் வரவழைக்கப்பட்டு மேலும் கலவரம் நடைபெறாமல் தடுக்கப்பட்டது. கர்நாடக அணைகளில் உள்ள தண்ணீர் குடிநீருக்கு தவிர வேறு எந்த பயன்பாட்டுக்கும் பயன்படுத்துவது இல்லை என்று கர்நாடக சட்டசபையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்ட பிறகும், இதை காரணம் காட்டி தண்ணீர் திறப்பதை கர்நாடகம் நிறுத்தியது.
தமிழக அரசு மனுஇந்த நிலையில் கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை கடந்த மாதம் தொடங்கி பெய்து வருகிறது. இதனால் அணைகளுக்கு நீர் வரத்தொடங்கியுள்ளது. ஆயினும் எதிர்பார்த்த அளவுக்கு தண்ணீர் வரவில்லை. இதில் கொஞ்சம் தண்ணீரை கர்நாடக அரசு தமிழகத்திற்கு திறந்துவிட்டுள்ளது. இதை கண்டித்து மண்டியா மாவட்டத்தில் விவசாயிகள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.
இந்த நிலையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி காவிரி நதியில் இருந்து தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நிலுவையில் உள்ள 6 டி.எம்.சி(1 டி.எம்.சி. என்பது 100 கனஅடி) தண்ணீரை திறந்துவிடும்படி உத்தரவிட கோரி சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு ஒரு மனுவை தாக்கல் செய்துள்ளது. அந்த மனு அடுத்த வாரம் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது குறித்து முதல்–மந்திரி சித்தராமையாவிடம் பெங்களூருவில் நேற்று நிருபர்கள் கேட்டனர். அதற்கு அவர் பதிலளிக்கையில் கூறியதாவது:–
தக்க பதில் அளிப்பார்கள்‘‘காவிரி நீரை திறக்குமாறு கேட்டு தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டுக்கு சென்றுள்ளது. கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கி ஒரு மாதமாகியும், காவிரி படுகையில் குறைவான மழையே பெய்துள்ளது. இது சுப்ரீம் கோர்ட்டின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும். மேலும் தமிழக அரசின் மனுவுக்கு சுப்ரீம் கோர்ட்டில் கர்நாடக வக்கீல்கள் திறமையாக வாதாடி தக்க பதில் அளிப்பார்கள்.
அணைகளில் தண்ணீர் இருப்பு மிக குறைந்த அளவுவே உள்ளது என்பதை சுப்ரீம் கோர்ட்டுக்கு தெரிவிப்போம். மேலும் காவிரி பிரச்சினையில் அடுத்து முன்னெடுத்து செல்ல வேண்டிய சட்ட போராட்டம் குறித்து மாநில அரசின் தலைமை வழக்கறிஞருடன் கலந்து ஆலோசனை நடத்துவேன்.’’
இவ்வாறு சித்தராமையா கூறினார்.
கர்நாடக அரசு அதிகாரிகள் தரப்பில் கூறியதாவது:–
13.454 டி.எம்.சி. தண்ணீர்2014–15–ம் ஆண்டு நல்ல மழை பெய்ததால் தமிழ்நாட்டிற்கு 229 டி.எம்.சி. தண்ணீர் வழங்கப்பட்டது. தற்போது பருவமழை சரியாக பெய்யாததால் காவிரி படுகையில் உள்ள அணைகளில் நீர் இருப்பு மிக குறைவாக உள்ளது. தற்போது கே.ஆர்.எஸ். அணையில் 3.842 டி.எம்.சி. தண்ணீரும், ஹாரங்கியில் 2.542 டி.எம்.சி.யும், ஹேமாவதியில் 3.764 டி.எம்.சி.யும், கபினியில் 3.764 டி.எம்.சி.யும் உள்ளன. 4 அணைகளிலும் சேர்த்து மொத்தம் 13.454 டி.எம்.சி. தண்ணீர் தான் இருப்பு உள்ளது.’’
இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.