ஏ.டி.எம்.மில் பணம் எடுக்கும் பெண்களிடம் நூதன முறையில் கொள்ளை வாலிபர் கைது


ஏ.டி.எம்.மில் பணம் எடுக்கும் பெண்களிடம் நூதன முறையில் கொள்ளை வாலிபர் கைது
x
தினத்தந்தி 6 July 2017 3:45 AM IST (Updated: 6 July 2017 1:02 AM IST)
t-max-icont-min-icon

திருவள்ளூரில் ஏ.டி.எம்.மில் பணம் எடுக்கும் பெண்களிடம் நூதன முறையில் கொள்ளையடித்து வந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

திருவள்ளூர்,

திருவள்ளூரை அடுத்த ஈக்காடு விசுவாசபுரத்தை சேர்ந்தவர் சுவாமிராஜா. இவரது மனைவி சாந்தாபாய் (வயது 48). இவர் கடந்த மாதம் 7–ந் தேதி திருவள்ளூர் ஜே.என். சாலையில் உள்ள ஒரு ஏ.டி.எம்.மில் பணம் எடுப்பதற்காக நின்று கொண்டிருந்தார். அப்போது அவருக்கு முன்னால் நின்று கொண்டிருந்த ஒரு வாலிபரிடம் தனது ஏ.டி.எம் கார்டை கொடுத்து தனக்கு பணம் எடுத்து தருமாறு கூறி அதனுடைய ரகசிய எண்ணையும் அவரிடம் கூறியுள்ளார்.

இதைத்தொடர்ந்து அந்த வாலிபர் ஏ.டி.எம். கார்டை எந்திரத்தில் போட்டு பார்த்து விட்டு பணம் இல்லை எனக்கூறினார். இதனால் அந்த கார்டை வாங்கிக்கொண்டு சாந்தாபாய் வெளியே வந்தார். ஆனால் சிறிது நேரத்தில், அவரது கணக்கில் இருந்து ரூ.29 ஆயிரம் எடுக்கப்பட்டதாக சாந்தாபாயின் செல்போனுக்கு எஸ்.எம்.எஸ். வந்தது. அவரை ஏமாற்றி விட்டு அந்த வாலிபர் பணத்தை எடுத்ததாக தெரிகிறது.

இதனால் அதிர்ச்சியடைந்த சாந்தாபாய் உடனே அந்த ஏ.டி.எம்.க்கு விரைந்து சென்று பார்த்தார். ஆனால் அதற்குள் அந்த வாலிபர் அங்கிருந்து மாயமாகி விட்டார்.

இது குறித்து சாந்தாபாய் திருவள்ளூர் டவுன் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த ஏ.டி.எம்.மில் இருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர். அதில் பதிவான காட்சிகளை அடிப்படையாக கொண்டு சாந்தாபாயின் கணக்கில் இருந்து பணம் திருடிய வாலிபரை தேடி வந்தனர்.

அதே ஏ.டி.எம் முன்பு நேற்று முன்தினம் ஒருவர் சந்தேகப்படும் வகையில் சுற்றித்திரிந்து கொண்டிருந்தார். இதைப் பார்த்த போலீசார் அவரை சந்தேகத்தின் பேரில் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை செய்தனர். அப்போது அவர் திருவள்ளூர் அருகே உள்ள கீழானூரை சேர்ந்த சரவணன் (25) என்று தெரிய வந்தது.

அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் சாந்தாபாயை ஏமாற்றி பணம் திருடிச்சென்றதை ஒப்புக்கொண்டார். இதைப்போல ஏ.டி.எம்.முக்கு பணம் எடுக்க வந்த மேலும் சில பெண்களிடமும் கைவரிசை காட்டியதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு போலீசாரின் விசாரணையில் இருந்தபோதே திடீரென அவர் போலீஸ் நிலையத்தில் இருந்து தப்பி ஓடினார். இதைத்தொடர்ந்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட போலீசார், சுமார் ஒருமணி நேரத்துக்குப்பின் திருவள்ளூரில் வைத்து அவரை கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.


Next Story