என்ஜினீயரிங் கல்லூரி மாணவர்கள் போராட்டம் கதிராமங்கலம் பொதுமக்களுக்கு ஆதரவாக நடத்தினர்
சித்தோடு ஐ.ஆர்.டி.டி. என்ஜினீயரிங் கல்லூரி மாணவர்கள் கதிராமங்கலம் பொதுமக்களுக்கு ஆதரவாக வகுப்புகளை புறக்கணித்து போராட்டம் நடத்தினார்கள்.
பவானி,
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள கதிராமங்கலத்தில் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் 7 இடங்களில் ஆழ்துளை கிணறு அமைத்து கச்சா எண்ணெய் எடுத்து வருகிறது. கடந்த 30–ந்தேதி எண்ணெய் குழாய் உடைந்து கசிவு ஏற்பட்டது. இதையடுத்து அந்த பகுதி மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இவர்களுக்கு ஆதரவாக தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இந்தநிலையில் ஈரோடு மாவட்டம் சித்தோட்டில் உள்ள ஐ.ஆர்.டி.டி. என்ஜினீயரிங் கல்லூரி மாணவர்கள் கதிராமங்கலத்தில் போராடும் பொதுமக்களுக்கு ஆதரவாக நேற்று வகுப்புகளை புறக்கணித்தார்கள்.
பின்னர் அனைத்து மாணவர்களும் கல்லூரியின் முகப்பு வளாகத்தில் திரண்டு நின்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்கள். அப்போது அவர்கள், ‘ஓ.என்.ஜி.சி. நிறுவனமே கதிராமங்கலத்தை விட்டு ஓடிப்போ. மத்திய, மாநில அரசுகளே கதிராமங்கலம் மக்களுக்கு ஆதரவாக நடவடிக்கை எடு‘ என்று கோஷம் எழுப்பினார்கள்.
இந்தநிலையில் மாணவர்கள் போராட்டம் குறித்து தகவல் கிடைத்ததும் பவானி துணை போலீஸ் சூப்பிரண்டு ஜானகிராமன் தலைமையில் பவானி, சித்தோடு போலீசார் கல்லூரி வளாகம் அருகே குவிக்கப்பட்டார்கள். போராட்டத்தில் ஈடுபடும் மாணவர்கள் கல்லூரிக்கு எதிரே உள்ள ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட வந்துவிடக்கூடாது என்று போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தார்கள்.–