கடலூரில் பயிற்சி சப்–இன்ஸ்பெக்டருக்கு கொலை மிரட்டல் 2 பேர் கைது
கடலூர் ஆல்பேட்டை சோதனைச்சாவடியில் வடலூர் போலீஸ் நிலைய பயிற்சி சப்–இன்ஸ்பெக்டர் ஜீவா தலைமையில் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் நேற்று மதியம் வாகன சோதனை நடத்தினர்.
கடலூர்,
கடலூர் ஆல்பேட்டை சோதனைச்சாவடியில் வடலூர் போலீஸ் நிலைய பயிற்சி சப்–இன்ஸ்பெக்டர் ஜீவா தலைமையில் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் நேற்று மதியம் வாகன சோதனை நடத்தினர். அப்போது புதுச்சேரியில் இருந்து கடலூர் நோக்கி வந்த ஷேர்ஆட்டோவை மடக்கி போலீசார் சோதனை செய்தனர். சோதனையின் போது அந்த ஷேர்ஆட்டோவில் குடிபோதையில் வந்த கிழக்கு ராமாபுரம் மாரியம்மன்கோவில் தெருவை சேர்ந்த வீரப்பன் மகன் விஜயகுமார் (வயது 26), கண்ணன் மகன் வினோத்குமார் (21) ஆகிய 2 பேரும் பயிற்சி சப்–இன்ஸ்பெக்டர் ஜீவாவை ஆபாசமாக பேசி, அவரை பணி செய்யவிடாமல் தடுத்து, தான் கையில் வைத்திருந்த பீர்பாட்டிலை காட்டி கொலை செய்து விடுவதாக மிரட்டியதாக தெரிகிறது. இது பற்றி பயிற்சி சப்–இன்ஸ்பெக்டர் ஜீவா கடலூர் புதுநகர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் வழக்குப்பதிவு செய்து விஜயகுமார், வினோத்குமார் ஆகிய 2 பேரையும் கைது செய்தார்.