குடும்ப தகராறில் கத்தியால் குத்தி மனைவி கொலை, தொழிலாளி கைது
திருக்கோவிலூர் அருகே குடும்ப தகராறில் மனைவியை கத்தியால் குத்திக்கொலை செய்த தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
திருக்கோவிலூர்,
விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள காரணை கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை(வயது 40). கூலித்தொழிலாளி. இவருக்கும் வீடூரை சேர்ந்த சித்ரா என்கிற வீரலட்சுமி(33) என்பவருக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு விக்னேஷ்(7), கார்த்தி(5) ஆகிய 2 மகன்கள் உள்ளனர்.
ஏழுமலை தினமும் மது குடித்து விட்டு வீட்டுக்கு வந்து சித்ராவுடன் தகராறு செய்து வந்ததாக தெரிகிறது. இதனால் கணவன்–மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து சித்ரா தனது கணவரை பிரிந்து விக்கிரவாண்டி அருகே வீடூர் கிராமத்தில் உள்ள தனது பெற்றோர் வீட்டில் குழந்தைகளுடன் கடந்த சில ஆண்டுகளாக வசித்து வந்தார். ஏழுமலை பெங்களூருக்கு சென்று அங்கு கூலி வேலை செய்து வந்தார்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்த ஏழுமலை, வீடூரில் உள்ள தனது மாமனார் வீட்டுக்கு சென்று சித்ராவை தன்னுடன் குடும்ப நடத்த வருமாறு அழைத்துள்ளார். மேலும் அவர், சித்ராவிடம் இனிமேல் உன்னுடன் தகராறு செய்ய மாட்டேன் என்று கூறியுள்ளார். இதனை நம்பிய சித்ரா தனது குழந்தைகளை அழைத்துக் கொண்டு ஏழுமலையுடன் குடும்பம் நடத்த காரணை கிராமத்துக்கு சென்றார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு கணவன்–மனைவி இடையே மீண்டும் குடும்ப தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரமடைந்த ஏழுமலை, சித்ராவை கத்தியால் சரமாரியாக குத்தினார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த சித்ரா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுபற்றி தகவல் அறிந்த திருக்கோவிலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு அசோக்குமார் மற்றும் அரகண்டநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயவேல், சப்–இன்ஸ்பெக்டர் கவிதா ஆகியோர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, பிணமாக கிடந்த சித்ராவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுதொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் ஏழுமலை குடும்ப தகராறு காரணமாக சித்ராவை கத்தியால் குத்தி கொலை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து ஏழுமலையை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
குடும்ப தகராறில் மனைவியை, தொழிலாளி கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் திருக்கோவிலூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.