போலீஸ் நிலையத்தில் விசாரணை கைதி வி‌ஷம் குடித்து தற்கொலை


போலீஸ் நிலையத்தில் விசாரணை கைதி வி‌ஷம் குடித்து தற்கொலை
x
தினத்தந்தி 8 July 2017 10:19 PM GMT (Updated: 8 July 2017 10:19 PM GMT)

நாலச்சோப்ரா போலீஸ் நிலையத்தில் விசாரணை கைதி வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

மும்பை,

நாலச்சோப்ரா போலீஸ் நிலையத்தில் விசாரணை கைதி வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

வாந்தி எடுத்த கைதி

மும்பை, வில்லேபார்லே பகுதியை சேர்ந்தவர் மகேஷ்(வயது46). இவர் ஒரு மோசடி வழக்கு தொடர்பாக அர்னாலா போலீசாரால் கைது செய்யப்பட்டு இருந்தார். கோர்ட்டு இவரை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க உத்தரவிட்டு இருந்தது. அர்னாலா போலீஸ் நிலையத்தில் லாக்–அப் வசதி இல்லை. எனவே இவர் நாலச்சோப்ரா போலீஸ் நிலைய லாக்–அப்பில் அடைக்கப்பட்டு இருந்தார்.

இந்தநிலையில் கடந்த வியாழக்கிழமை அன்று மகேஷ் திடீரென வாந்தி எடுத்தார்.

வி‌ஷம் குடித்து தற்கொலை

உடனடியாக போலீசார் அவரை மீட்டு அருகில் உள்ள மாநகராட்சி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அப்போது மகேஷ் வி‌ஷம் (துத்தநாகம் பாஸ்பைடு) குடித்து இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்தநிலையில் நேற்று முன்தினம் மதியம் 2 மணியளவில் சிகிச்சை பலனின்றி மகேஷ் பரிதாபமாக உயிர் இழந்தார்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் மகேசுக்கு வி‌ஷம் எப்படி கிடைத்தது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story