திருமணத்திற்கு மறுத்த இளம்பெண் கொலை; முட்டை வியாபாரிக்கு ஆயுள் தண்டனை


திருமணத்திற்கு மறுத்த இளம்பெண் கொலை; முட்டை வியாபாரிக்கு ஆயுள் தண்டனை
x
தினத்தந்தி 10 July 2017 3:45 AM IST (Updated: 10 July 2017 1:53 AM IST)
t-max-icont-min-icon

மும்பை விக்ரோலி பகுதியில் உள்ள குடிசை பகுதியை சேர்ந்தவர் அப்சனா (வயது 17).

மும்பை,

அதே பகுதியில் முட்டை வியாபாரம் செய்து வந்த ஹரூன் சேக் (24) என்ற வாலிபர் ஒருதலையாக காதலித்து வந்தார். ஆனால் அப்சனா வாலிபரின் காதலை ஏற்கவில்லை. இந்தநிலையில் ஹரூன் சேக் தனது பெற்றோருடன் அப்சனா வீட்டிற்கு சென்று பெண் கேட்டார். ஆனால் அப்சனாவிற்கு, ஹரூன் சேக்கை பிடிக்கவில்லை என்பதால் அவளது பெற்றோர் திருமணத்திற்கு மறுத்துவிட்டனர். இது அவருக்கு கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது.2014–ம் ஆண்டு ஆகஸ்ட் 8–ந் தேதி காலை 7 மணியளவில் அப்சனா வீட்டருகே உள்ள பொது கழிவறைக்கு சென்று கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த ஹரூன் சேக், அவரை சரமாரியாக கத்தியால் குத்தினார். இதில் இளம்பெண்ணின் கழுத்து, மார்பு, வயிறு பகுதியில் குத்து விழுந்தது. இதனால் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். இந்தநிலையில் அந்த பகுதியில் ரோந்து வந்த போலீசார் தப்பியோட முயன்ற ஹரூன் சேக்கை கைது செய்தனர். மேலும் அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்தனர்.இந்த வழக்கின் விசாரணை மும்பை செசன்ஸ் கோர்ட்டில் நடந்து வந்தது. விசாரணையில் வாலிபர் மீதான குற்றச்சாட்டு ஆதாரங்களுடன் நிரூபணமானது. இதையடுத்து அவர், நோயால் அவதிப்படும் பெற்றோரை கருத்தில் கொண்டு தனக்கு குறைந்தபட்ச தண்டனை வழங்க கோர்ட்டில் வாதாடினார். எனினும் குற்றத்தின் கொடூர தன்மையை கருதி நீதிபதி ராஷ்வி, வாலிபரின் வாதத்தை நிராகரித்தார். மேலும் நீதிபதி அவருக்கு ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பு கூறினார்.

Next Story