தூத்துக்குடி என்ஜினீயர் கொலை வழக்கில் போலீசாரால் தேடப்பட்டு வந்த 2 பேர் கோர்ட்டில் சரண்


தூத்துக்குடி என்ஜினீயர் கொலை வழக்கில் போலீசாரால் தேடப்பட்டு வந்த 2 பேர் கோர்ட்டில் சரண்
x
தினத்தந்தி 12 July 2017 4:15 AM IST (Updated: 12 July 2017 12:54 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி என்ஜினீயர் கொலை வழக்கில் போலீசாரால் தேடப்பட்ட 2 பேர் நெல்லை, ஆலங்குளம் கோர்ட்டுகளில் சரண் அடைந்தனர். இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட பெண் வக்கீலை போலீசார் தேடி வருகிறார்கள்.

நெல்லை,

தூத்துக்குடி ரைஸ்மில் தெருவை சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன்(வயது 47). கம்ப்யூட்டர் என்ஜீனியரான இவர், அமெரிக்க குடியுரிமை பெற்று அங்கு நீண்ட காலமாக வேலை செய்து வந்தார். இவருடைய மனைவி முத்துச்செல்வி. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். முத்துகிருஷ்ணன் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு தூத்துக்குடி வந்தார்.

அப்போது கணவன்–மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அவர்கள் விவாகரத்து பெற முயற்சி செய்தனர். விவாகரத்து தொடர்பாக நெல்லை பாளையங்கோட்டையில் உள்ள ஒரு வக்கீலை முத்துகிருஷ்ணன் அடிக்கடி சந்திந்து வந்தார். அப்போது அந்த வக்கீல் அலுவலகத்தில் பணிபுரிந்து வந்த ஒரு பெண் வக்கீலுடன் முத்துகிருஷ்ணன் அடிக்கடி பேசி வந்துள்ளார்.

ஐகோர்ட்டில் வழக்கு

இந்த நிலையில் கடந்த மே மாதம் 19–ந் தேதி நெல்லைக்கு வக்கீலை சந்திக்க சென்று வருவதாக முத்துகிருஷ்ணன் தனது தாயாரிடம் கூறி விட்டு வீட்டில் இருந்து புறப்பட்டு வந்தார். அதன் பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் முத்துகிருஷ்ணனின் தாயார் அம்மை முத்து தூத்துக்குடி தென்பாகம் போலீசில் ஒரு புகார் மனு கொடுத்தார். அதில், மாயமான தனது மகனை கண்டு பிடித்து தரவேண்டும் என்று கூறி இருந்தார். இதனைத்தொடர்ந்து போலீசார் முத்துகிருஷ்ணன் மாயமானதாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் மாயமான தனது மகனை கண்டுபிடித்து தரக்கோரி மதுரை ஐகோர்ட்டில் அம்மை முத்து ஹேபியஸ் கார்பஸ் மனு ஒன்றை தாக்கல் செய்தார். இதனைத்தொடர்ந்து போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர்.

கொலை–கைது

மாயமான அன்று முத்துகிருஷ்ணன் கடைசியாக செல்போனில் பேசிய எண்ணை வைத்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் பெண் வக்கீலின் கணவருடன் முத்துகிருஷ்ணன் பேசியது தெரிய வந்தது. இதனையடுத்து வக்கீல் கணவர் ராஜகோபாலை போலீசார் பிடித்து விசாரித்தபோது முத்துகிருஷ்ணனை கொலை செய்து விட்டதாக அவர் தெரிவித்தார்.

பெண் வக்கீலுடன் பேசுவது சம்பந்தமாக முத்துகிருஷ்ணனுக்கும், வக்கீல் கணவர் ராஜகோபாலுக்கும் இடையே தகராறு இருந்ததும், இதனால் ஆத்திரம் அடைந்த ராஜகோபால் தனது நண்பர் இசக்கிமுத்து உள்பட 4 பேருடன் சேர்ந்து முத்துகிருஷ்ணனை காரில் கடத்தி சென்று கொலை செய்து தாழையூத்து அருகே உள்ள பாப்பாக்குளத்தில் தண்ணீர் தேங்கி கிடந்த கல்குவாரியில் உடலை காருடன் தள்ளி விட்டு விட்டு தப்பி சென்றதும் விசாரணையில் தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து ராஜகோபாலை போலீசார் கைது செய்தனர். அவர் கொடுத்த தகவலின் பேரில் நேற்று முன்தினம் கல்குவாரியில் அழுகிய நிலையில் கிடந்த முத்துகிருஷ்ணனின் உடலை காருடன் மீட்டனர்.

கோர்ட்டில் 2 பேர் சரண்

இந்த கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட மற்ற 3 பேரையும் போலீசார் தேடி வந்தனர். போலீசார் தங்களை தேடுவதை அறிந்த ராஜவல்லிபுரத்தை சேர்ந்த இசக்கிமுத்து(30), நெல்லை முதலாவது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நீதிபதி ராமதாஸ் முன்னிலையில் நேற்று சரண் அடைந்தார். அவரை 15 நாள் காவலில் வைக்க நீதிபதி ராமதாஸ் உத்தரவிட்டார். இதனைத்தொடர்ந்து அவர் பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டார்.

இதேபோல் ஆலங்குளம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில், ராஜவல்லிபுரத்தை சேர்ந்த மந்திரமூர்த்தி மகன் ஜெபராஜ்(20) நேற்று சரண் அடைந்தார். அவரை 15 நாள் காவலில் வைக்க நீதிபதி பிச்சைராஜன் உத்தரவிட்டார். இதனைத்தொடர்ந்து அவர் நாங்குநேரி சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் அடைக்கப்பட்டார்.

இந்த கொலை வழக்கில் தொடர்புடைய மற்றொருவரையும், பெண் வக்கீலையும் போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.


Next Story