சிவமொக்காவில் எடியூரப்பாவை முற்றுகையிட்டு காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்
தேசிய வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய கடனை தள்ளுபடி செய்ய மத்திய அரசை வலியுறுத்த கோரி சிவமொக்காவுக்கு வந்த எடியூரப்பாவை முற்றுகையிட்டு காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினர்.
சிவமொக்கா,
சிவமொக்கா டவுன் பாலராஜ் அர்ஸ் சாலையில் தலைமை தபால் நிலையம் உள்ளது. இந்த தபால் நிலையத்தில் புதிதாக பாஸ்போர்ட் மையம் அமைக்க மத்திய அரசு முடிவு செய்தது. இதற்காக கடந்த சில தினங்களுக்கு முன்பு பெங்களூரு பாஸ்போர்ட் மைய அதிகாரிகள் சிவமொக்கா வந்து தபால் நிலையத்தில் ஆய்வு செய்தனர்.
அப்போது பாஸ்போர்ட் மையம் அமைக்க இடம் போதுமான அளவு இல்லாதது தெரியவந்தது. இதுகுறித்து பாஸ்போர்ட் மைய அதிகாரிகள், உயர் அதிகாரிகளிடம் அறிக்கை சமர்ப்பித்தனர்.
எடியூரப்பா வருகைஇந்த நிலையில் நேற்று கர்நாடக மாநில பா.ஜனதா தலைவரும், சிவமொக்கா தொகுதி எம்.பி.யுமான எடியூரப்பா, சிவமொக்காவுக்கு வந்து இருந்தார். மேலும் அவர் தலைமை தபால் நிலையத்தில் பாஸ்போர்ட் மையம் அமைக்க இடத்தை ஆய்வு செய்து கொண்டு இருந்தார். அவருடன் மாவட்ட பா.ஜனதா தலைவர் ருத்ரேகவுடாவும் இருந்தார்.
இந்த நிலையில் தலைமை தபால் நிலையத்திற்கு வந்த 50–க்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினர் எடியூரப்பாவிடம், விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய ரூ.50 ஆயிரம் வரையிலான கடனை மாநில அரசு தள்ளுபடி செய்து விட்டது. ஆனால் தேசிய வங்கிகளில் வாங்கிய கடனை மத்திய அரசு தள்ளுபடி செய்யவில்லை. இதுகுறித்து மத்திய அரசிடம் வலியுறுத்தும்படி எடியூரப்பாவிடம் கோரிக்கை விடுத்தனர். அப்போது எடியூரப்பா, உங்கள் கோரிக்கைகளை மனுவாக எழுதி கொடுங்கள். கடன் தள்ளுபடி பற்றி மத்திய அரசிடம் வலியுறுத்துகிறேன் என்று கூறினார்.
முற்றுகை போராட்டம்ஆனால் அவர் கூறிய பதிலில் திருப்தி அடையாத காங்கிரஸ் கட்சியினர் திடீரென எடியூரப்பாவை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதுகுறித்து அறிந்த சிவமொக்கா டவுன் போலீசார் அங்கு விரைந்து சென்று போராட்டம் நடத்திய காங்கிரஸ் கட்சியினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனாலும் அவர்கள் தொடர்ந்து எடியூரப்பாவை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
இதையடுத்து எடியூரப்பாவை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய காங்கிரஸ் கட்சியிரை போலீசார் கைது செய்து அழைத்து சென்றனர். பின்னர் அவர்கள் அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர். முன்னதாக எடியூரப்பா தலைமை தபால் நிலையத்தில் பாஸ்போர்ட் மையம் அமைப்பதற்கு இடத்தை பார்வையிட்டு அங்கிருந்து சென்றார்.
எடியூரப்பாவை முற்றுகையிட்டு காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தியதால் தலைமை தபால் நிலையம் முன்பு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.