‘பத்திரமாக திரும்புவேன் என கூறிய தாய் பிணமாக திரும்புகிறார்’ மகன் உருக்கம்


‘பத்திரமாக திரும்புவேன் என கூறிய தாய் பிணமாக திரும்புகிறார்’ மகன் உருக்கம்
x
தினத்தந்தி 12 July 2017 5:00 AM IST (Updated: 12 July 2017 3:18 AM IST)
t-max-icont-min-icon

‘பத்திரமாக திரும்புவேன் என கூறிய தாய் பிணமாக திரும்புகிறார்’ என அமர்நாத் பக்தர்கள் மீதான தாக்குதலில் பலியான பெண்ணின் மகன் உருக்கத்துடன் கூறினார்.

காஷ்மீரின் அனந்தநாக் மாவட்டத்தில் பதான்கு என்ற இடத்தில் பயங்கரவாதிகள், அமர்நாத் பனிலிங்கத்தை தரிசித்து விட்டு பஸ்சில் திரும்பி கொண்டிருந்த பக்தர்களை குறிவைத்து தாக்குதல் நடத்தினார்கள். இந்த தாக்குதலில் 7 பக்தர்கள் உயிரிழந்தனர். 21 பேர் காயம் அடைந்தனர்.
இவர்களில் நிர்மலா தாக்குர், உஷா சோன்கர் (பலியானவர்கள்) உள்பட 13 பெண்கள் மற்றும் 2 ஆண்கள் என 15 பேர் பால்கர் மாவட்டம் தகானுவில் இருந்து சென்றவர்கள். இந்த பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக தற்போது உருக்கமான தகவல்கள் வெளியாகி உள்ளது.

இதுபற்றி உயிரிழந்த நிர்மலா தாக்குரின் மகன் பிரதிப் தாக்குர்(வயது30) கூறியதாவது:-

பத்திரமாக திரும்புவேன்

‘அமர்நாத் யாத்திரை சென்ற எனது தாய் நிர்மலா தாக்குர் கடந்த ஞாயிற்றுக்கிழமை என்னை போனில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது பால்தால் என்ற பகுதியில் சென்றபோது, தங்களது பஸ் மீது மர்மநபர்கள் கல்வீசி தாக்கியதாக கூறினார்.

இதைக்கேட்டு நான் பதறி போனேன். உடனே யாத்திரையை ரத்து செய்துவிட்டு உடனடியாக தகானு திரும்பும் படி அவரிடம் கூறினேன். ஆனால் அவர் யாத்திரையை முடித்துவிட்டு பத்திரமாக திரும்புவேன் என்று நம்பிக்கையுடன் கூறினார்.

பயங்கரவாதிகள் தாக்குதலில் என் தாய் கொல்லப்பட்டது இன்று(நேற்று) அதிகாலை 5.30 மணிக்கு தான் எனக்கு தெரியும். தாயுடன் யாத்திரை சென்ற பாக்கியமணி என்பவர் போன் செய்து கூறினார். இந்த தாக்குதலில் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியதாக தெரிவித்தார்.

பத்திரமாக திரும்புவேன் என்று கூறிய எனது தாய் பிணமாக திரும்புவது எனது நெஞ்சை பிளக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

உஷா சோன்கர்

இதுபற்றி உஷா சோன்கரின் சகோதரர் குட்டு ராம்லக்கன் சோன்கர் கூறுகையில், “எனது சகோதரி ஆன்மிகத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். அதிகாலையிலேயே எழுந்து பூஜைகள் செய்வார். அமர்நாத் யாத்திரையின் போதும் அப்படி தான் செய்திருக்கிறார். நாங்கள் 7 பேர் சகோதரர்கள். உஷா சோன்கர் எங்களுக்கு ஒரே சகோதரி. உஷா சோன்கருக்கு 4 மகள்கள், 1 மகன் என 5 பிள்ளைகள் உள்ளனர்.

இவர்களில் 3 மகள்களுக்கு திருமணமாகி விட்டது. உஷா சோன்கர் பயங்கரவாத தாக்குதலில் கொல்லப்பட்ட செய்தி கேட்டு எங்களது இதயம் நொறுங்கிவிட்டது, என்று உருக்கமாக கூறினார்.

உயிர் பிழைத்தவர் உருக்கம்

இந்த பயங்கரவாத தாக்குதலில் உயிர் பிழைத்த தகானு பகுதியை சேர்ந்த பல்லவி அபியன்கர் என்ற 55 வயது பெண் நேற்று விமானம் மூலம் மும்பை திரும்பினார். அவர் நெஞ்சை பதற வைக்கும் இந்த சம்பவம் குறித்து நிருபர்களிடம் கூறியதாவது:-

முதலில் பட்டாசு தான் வெடிக்கிறதோ என்று நான் நினைத்தேன். சில வினாடிகளுக்கு பின்னர், என்னுடைய சக பயணிகள் துப்பாக்கி குண்டுகளால் தாக்கப்பட்டு சரிந்து விழுந்ததை கண்டதும், திகிலை உணர்ந்தேன். பஸ் டிரைவரின் சாமர்த்தியத்தால் தான் ஏராளமானோர் உயிர் பிழைத்தோம். டிரைவர் மட்டும் இல்லை என்றால், உயிர் இழப்புகள் இன்னமும் அதிகமாயிருக்கும்.

பயங்கரவாதிகள் பஸ்சின் முன்புறமும், வலதுபுறமும் நின்று கொண்டு துப்பாக்கியால் சுட்டனர். இதனால், பஸ்சுக்குள் வலதுபுறம் அமர்ந்து இருந்தவர்கள் தான் அதிகளவில் பாதிக்கப்பட்டு காயம் அடைந்தனர். உயிரையும் விட்டனர். சம்பவத்தன்று இரவு 8.20 மணி முதல் 8.30 மணிக்குள் ஒட்டுமொத்த சம்பவமும் நடந்து முடிந்துவிட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story