தொழிலாளி சாவு: அரசு ஆஸ்பத்திரியில் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்
மஞ்சூர் அருகே உள்ள எமரால்டு போத்தகண்டிமட்டம் இந்திராநகர் பகுதியை சேர்ந்தவர் முருகன் (வயது 47),
மஞ்சூர்,
மஞ்சூர் அருகே உள்ள எமரால்டு போத்தகண்டிமட்டம் இந்திராநகர் பகுதியை சேர்ந்தவர் முருகன் (வயது 47), தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் இரவு வீட்டில் இருந்து பஜார் பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது அந்த சாலையில் இருந்த பள்ளத்தில் மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி விழுந்தது. இதில் பலத்த காயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் 108 ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஊட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.
இதுபற்றி அறிந்ததும் முருகனின் உறவினர்கள் ஊட்டி அரசு ஆஸ்பத்திரியை நேற்று முற்றுகையிட்டனர். தகவல் அறிந்து அங்கு வந்த ஊட்டி போலீசார், முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது அவர்கள், விபத்து நடந்த பகுதியில் வனவிலங்குகள் நடமாட்டம் இருப்பதால் அங்கு சில தோட்டத்தில் மின்வேலி அமைத்து உள்ளனர். மோட்டார் சைக்கிளில் இருந்து விழுந்தபோது மின்சாரம் தாக்கி முருகன் இறந்துவிட்டார். அவரது சாவில் மர்ம உள்ளது. அதுபற்றி உரிய விசாரணை நடத்த வேண்டும், என்றனர்.
இதையடுத்து போலீசார் பிரேத பரிசோனை அறிக்கை முடிவு வந்தபின்னர் தான் அதுபற்றி முடிவு செய்யப்படும் என்றனர். அதை தொடர்ந்து உடலை பெற்றுக் கொண்டு அனைவரும் கலைந்து சென்றனர்.