மதுபாட்டில்கள் ஏற்ற சென்ற சரக்கு வேன் மோதி விவசாயி சாவு: உறவினர்கள் சாலை மறியல்


மதுபாட்டில்கள் ஏற்ற சென்ற சரக்கு வேன் மோதி விவசாயி சாவு: உறவினர்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 12 July 2017 11:00 PM GMT (Updated: 12 July 2017 9:16 PM GMT)

மதுபாட்டில்கள் ஏற்ற சென்ற சரக்கு வேன் மோதி விவசாயி பரிதாபமாக இறந்தார். இதையடுத்து டாஸ்மாக் கடையை மூடக்கோரி உறவினர்கள், கிராமமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

செந்துறை,

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள இரும்புலிக்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன். இப்பகுதியில் உள்ள இவரது முந்திரி தோப்பில் நேற்று முன்தினம் டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது. இதற்கு பா.ம.க. வினர், பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பா.ம.க., பொதுமக்கள் எதிர்ப்பை மீறி போலீஸ் பாதுகாப்புடன் டாஸ்மாக் கடை திறக்கப்பட்டு உள்ளது. இந்த கடைக்கு உடையார்பாளையம் டாஸ்மாக் கடையில் இருந்து மதுபாட்டில்களை வாங்கி வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை டாஸ்மாக் கடையில் மதுபாட்டில்கள் காலியானதால் மதுபாட்டில்களை ஏற்றி வர அழகுதுரை என்பவர் சரக்கு வேனை எடுத்துக்கொண்டு டாஸ்மாக் கடை மேற்பார்வையாளர் சரவணனுடன் சென்றார்.

சரக்கு வேன் இரும்புலிக்குறிச்சி அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது குமிழியத்தை சேர்ந்த விவசாயியான ரவி (வயது 40) இரும்புலிக்குறிச்சியில் உள்ள ஏரி கரை படியில் அமர்ந்து நண்பர்களுடன் பேசி கொண்டிருந்தார். இந்நிலையில் அந்த வழியாக வந்த சரக்கு வேன் கட்டுப்பாட்டை இழந்து ஏரிக்குள் புகுந்தது. அப்போது படியில் அமர்ந்து பேசி கொண்டிருந்த ரவி மீது சரக்கு வேன் மோதியது. இதில் படுகாயமடைந்த ரவியை அருகில் உள்ளவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் கொண்டு செல்லும் வழியிலேயே ரவி பரிதாபமாக இறந்தார். இதனால் ஆத்திரமடைந்த ரவி உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் விபத்துக்கு காரணமான சரக்கு வேன் டிரைவர் அழகுதுரையை கைது செய்ய கோரி குமிழியம் செந்துறை- ஜெயங்கொண்டம் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த இரும்புலிக்குறிச்சி போலீசார் மற்றும் ஜெயங்கொண்டம் துணை போலீஸ் சூப்பிரண்டு கென்னடி ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் இரும்புலிக்குறிச்சியில் புதிதாக திறக்கப்பட்ட டாஸ்மாக் கடையை மூடவேண்டும், விபத்திற்கு காரணமான அழகுதுரை, டாஸ்மாக் கடை மேற்பார்வையாளர் சரவணன் ஆகியோரை கைது செய்ய வேண்டும். இறந்தவரின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்தனர். இதையடுத்து சாலை மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் செந்துறை-ஜெயங்கொண்டம் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. முன்னதாக போலீசார் ரவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மாலையில் ரவியின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள், கிராமமக்கள் குமிழியத்தில் மீண்டும் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் அழகுதுரையை கைது செய்யவேண்டும், உடனடியாக ரவி குடும்பத்திற்கு இழப்பீடு வழங்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.


Related Tags :
Next Story