தூத்துக்குடியில் பதுக்கிய 300 கிலோ கடல் அட்டை பறிமுதல் 2 பேர் கைது
தூத்துக்குடியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 300 கிலோ கடல் அட்டையை கடலோர பாதுகாப்பு போலீசார் பறிமுதல் செய்தனர்.
தூத்துக்குடியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 300 கிலோ கடல் அட்டையை கடலோர பாதுகாப்பு போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்த மினிவேனும் பறிமுதல் செய்யப்பட்டது.
கடல் அட்டைமன்னார் வளைகுடா உயிர்க்கோள காப்பக பகுதியில் அரியவகை கடல் அட்டைகள் காணப்படுகின்றன. இந்த கடல் அட்டைகள் தொடர்ந்து அழிவை சந்தித்து வந்தன. இதனால் கடல் அட்டைகளை பிடிக்க அரசு தடை விதித்து உள்ளது. ஆனாலும் தொடர்ந்து சிலர் கடல் அட்டைகளை பிடித்து, வெளிநாடுகளுக்கு கடத்தி விற்பனை செய்து வருகின்றனர். இதனால் கடலோர பாதுகாப்பு போலீசார், மன்னார்வளைகுடா உயிர்க்கோள காப்பக வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கண்காணிப்பு
இந்த நிலையில் கடலோர பாதுகாப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் முகேஷ் ஜெயக்குமார் அறிவுரையின் பேரில் சப்–இன்ஸ்பெக்டர்கள் சிவக்குமார், வசந்தகுமார் மற்றும் முருகன் ஆகியோர் தூத்துக்குடி கடற்கரை பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, ஒரு மினிவேனில் சிலர் கடல் அட்டைகளை கடத்தி செல்வது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து போலீசார் அந்த வேனை பின்தொடர்ந்தனர். அந்த வேன் தூத்துக்குடி மடத்தூர் ரோடு திரவியரத்தினநகரில் உள்ள ஒரு குடோனுக்கு சென்றது. உடனடியாக போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.
2 பேர் கைது
அங்கு ஏராளமான கடல் அட்டை அவித்து, காய வைக்கப்பட்டு இருந்தது. உடனடியாக போலீசார் அங்கு இருந்த தூத்துக்குடி கே.டி.சி. நகரை சேர்ந்த செல்லையா மகன் முருகன் (வயது 35), நெல்லை மாவட்டம் ஆலங்குளம் பொன்னாக்குடியை சேர்ந்த கோவில்பிச்சை மகன் ரவி (23) ஆகிய 2 பேரையும் மடக்கி பிடித்து கைது செய்தனர்.
தொடர்ந்து அவர்களிடம் நடத்திய விசாரணையில் தூத்துக்குடி கடற்கரையில் இருந்து கடல் அட்டையை சேகரித்து, பதப்படுத்தி வெளிநாடுகளுக்கு கடத்துவதற்காக வைத்து இருந்தது தெரியவந்தது. அவர்களிடம் இருந்து 300 கிலோ கடல் அட்டை மற்றும் அவர்கள் பயன்படுத்தி வந்த மினிவேனையும் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.5 லட்சம் என்று கூறப்படுகிறது. பின்னர் பறிமுதல் செய்த கடல் அட்டை மற்றும் காரை மன்னார் வளைகுடா உயிர்க்கோள காப்பக வனத்துறை அதிகாரி சடையாண்டியிடம் ஒப்படைத்தனர். தொடர்ந்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.