மருத்துவக்கல்லூரிக்கு அங்கீகாரம் பெற்றுத்தருவதாக ரூ.7½ கோடி மோசடி
மருத்துவ கல்லூரிக்கு அங்கீகாரம் பெற்றுத்தருவதாக கூறி ரூ.7½ கோடி மோசடி செய்த ஆமதாபாத்தை சேர்ந்தவரை போலீசார் கைது செய்தனர்.
காஞ்சீபுரம்,
காஞ்சீபுரம் மாவட்டம் கிழக்கு கடற்கரை சாலை, மணமை நல்லூரில் பொன்னையா ராமஜெயம் மருத்துவ கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் அடிப்படை கட்டமைப்புகளை ஆய்வு செய்து அங்கீகாரம் அளிக்க 2015–ம் ஆண்டு மத்திய அரசு அதிகாரிகள் வந்தனர்.
அப்போது குஜராத் மாநிலம், ஆமதாபாத்தை சேர்ந்த யோகேஷ்குமார் குப்தா (வயது 48) மத்திய அரசிடமிருந்து அங்கீகாரம் பெற்று தருவதாக கூறி கல்லூரி நிர்வாகி முருகேசனிடம் ரூ.7½ கோடி வாங்கினார். ஆனால் அவர் அதற்கான அங்கீகாரத்தை பெற்று தராமல் ஏமாற்றி வந்தார்.
சில நாட்களுக்கு பிறகு யோகேஷ்குமார் குப்தா தலைமறைவானார். இது குறித்து கல்லூரி நிர்வாகி முருகேசன், காஞ்சீபுரம் போலீசில் புகார் செய்தார். போலீஸ் சூப்பிரண்டு சந்தோஷ் ஹதிமானி உத்தரவின் பேரில், காஞ்சீபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான யோகேஷ்குமார் குப்தாவை தேடிவந்தனர்.
இந்நிலையில் யோகேஷ்குமார் குப்தா ஆமதாபாத்தில் பதுங்கி இருப்பதாக காஞ்சீபுரம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே போலீசார் அங்கு சென்று அவரை கைது செய்தனர். இதையடுத்து அவரை காஞ்சீபுரம் அழைத்து வந்து செங்கல்பட்டு கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தினர். பின்னர் அவர் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.