செங்கம் அருகே மொபட் மீது லாரி மோதி பெண் பலி: பொதுமக்கள் சாலை மறியல்


செங்கம் அருகே மொபட் மீது லாரி மோதி பெண் பலி: பொதுமக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 17 July 2017 3:45 AM IST (Updated: 16 July 2017 10:27 PM IST)
t-max-icont-min-icon

செங்கம் அருகே மொபட் மீது லாரி மோதியதில் பெண் பரிதாபமாக உயிரிழந்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு தாமதமாக வந்ததால் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

செங்கம்,

செங்கத்தை அடுத்த விண்ணவனூர் பகுதியை சேர்ந்தவர் பாலாஜி (வயது 33), தொழிலாளி. இவரது மனைவி அனிதா (25). நேற்று மாலை 5.30 மணி அளவில் பாலாஜி, விண்ணவனூர் பஸ் நிறுத்தம் அருகே நின்று கொண்டிருந்தார். கணவரை வீட்டிற்கு அழைத்து வருவதற்காக அனிதா மொட்டில் சென்றார்.

விண்ணவனூர் மெயின் ரோட்டில் வந்துக் கொண்டிருந்தபோது, அந்த வழியாக வந்த லாரி திடீரென மொபட் மீது மோதியது. இதில் அனிதா, லாரியில் சிக்கிக்கொண்டு ½ கிலோ மீட்டர் தூரத்திற்கு இழுத்து செல்லப்பட்டார். இதில் உடல் சிதைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

டிரைவரின் கட்டுபாட்டை இழந்து சாலையோரம் உள்ள பள்ளத்தில் லாரி கவிழ்ந்தது. இதனையடுத்து லாரி டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து பாச்சல் போலீசாருக்கும், 108 ஆம்புலன்சிற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் போலீசாரும், ஆம்புலன்சும் சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாகியும் சம்பவ இடத்திற்கு வரவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த பொது மக்கள் விண்ணவனூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

பின்னர் 6.30 மணி அளவில் போலீசார் அங்கு வந்தனர். சிறிது நேரத்தில் ஆம்புலன்சும் அங்கு வந்தது. அப்போது பொதுமக்கள் ஆம்புலன்ஸ் வாகனத்தின் சாவியை எடுத்து கொண்டனர்.

அதைத் தொடர்ந்து போலீசார், பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இந்த சம்பவம் குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினர்.

இதயைடுத்து பொதுமக்கள் ஆம்புலன்ஸ் வாகனத்தின் சாவியை கொடுத்துவிட்டு, அங்கிருந்து கலைந்து சென்றனர். சாலை மறியலால் அந்த பகுதியில் 1 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீசார் போக்குவரத்தை சரிசெய்தனர்.

பின்னர் போலீசார் அனிதாவின் உடலை மீட்டு பிரேத பரிசோனைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் செங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story