பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்: கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க கூட்டத்தில் தீர்மானம்


பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்: கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க கூட்டத்தில் தீர்மானம்
x
தினத்தந்தி 16 July 2017 9:45 PM GMT (Updated: 16 July 2017 5:36 PM GMT)

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க மாவட்ட பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கள்ளக்குறிச்சி,

கள்ளக்குறிச்சியில் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க விழுப்புரம் மாவட்ட பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் பெரியாப்பிள்ளை தலைமை தாங்கினார். மாவட்ட துணைத்தலைவர் பெரியதமிழன், மாவட்ட தலைமை நிலைய செயலாளர் மூர்த்தி, வட்ட தலைவர் கருணாநிதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் புஷ்பகாந்தன் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளர்களாக முன்னாள் கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க மாநில தலைவர் சுப்பிரமணியன், மாநில துணை பொதுச்செயலாளர் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டு சங்க செயல்பாடுகள் குறித்து பேசினர்.

கூட்டத்தில் கள்ளக்குறிச்சி கோட்டாட்சியர், கிராம நிர்வாக அலுவலர்களை மாவட்ட கலெக்டர், மாவட்ட வருவாய் அலுவலர் ஆகியோரின் முன் அனுமதி பெறாமல் மாறுதல் செய்வதை கண்டிப்பது, புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதி திட்டத்தை அமல்படுத்த வேண்டும், முதல்–அமைச்சரின் மருத்துவ காப்பீடு திட்ட அடையாள அட்டையை உடனடியாக கிராம நிர்வாக அலுவலர்களுக்கு வழங்க வேண்டும், அரசு ஆணைப்படி விழுப்புரம் மாவட்டத்தில் நில அளவை பயிற்சி முடித்த கிராம நிர்வாக அலுவலர்களுக்கு 42 நாட்கள் நாட்கள் நிர்வாக பயிற்சி அளிக்க மாவட்ட வருவாய் அலுவலர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில் மாவட்ட இணை செயலாளர் கண்ணதாசன், மாவட்ட அமைப்பு செயலாளர் இந்திரகுமார், தமிழ்நாடு முன்னாள் கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க மாநில செயலாளர்கள் ராஜி, பரமானந்தன், வட்ட செயலாளர் மணிகண்டன், வட்ட பொருளாளர் எழிலன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட பொருளாளர் சிவக்குமார் நன்றி கூறினார்.


Next Story