ரூ.5 லட்சம் கேட்டு மிரட்டி தம்பதியரை கடத்தி வந்து குடிபாலா வனப்பகுதியில் சிறை வைப்பு பெண் உள்பட 10 பேர் கைது


ரூ.5 லட்சம் கேட்டு மிரட்டி தம்பதியரை கடத்தி வந்து குடிபாலா வனப்பகுதியில் சிறை வைப்பு பெண் உள்பட 10 பேர் கைது
x
தினத்தந்தி 19 July 2017 3:30 AM IST (Updated: 19 July 2017 12:31 AM IST)
t-max-icont-min-icon

ரூ.5 லட்சம் கேட்டு மிரட்டி மதனப்பள்ளி தம்பதியரை கடத்தி வந்து குடிபாலா வனப்பகுதியில் சிறை வைப்பு பெண் உள்பட 10 பேர் கைது, கைத்துப்பாக்கி, கத்தி பறிமுதல்

சித்தூர்,

சித்தூர் மாவட்டம் குடிபாலா போக்குவரத்துப்பிரிவு போலீசார் நேற்று காலை தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக சித்தூரில் இருந்து குடிபாலாவை நோக்கி ஒரு கார் வேகமாக வந்தது. அந்தக் காரை நிறுத்தி போலீசார் சோதனைச் செய்தனர். காரில் வந்தவர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்ததால், போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது.

உடனே அவர்கள் போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரிக்கப்பட்டனர். அவர்கள் மதனப்பள்ளியைச் சேர்ந்த முருகேசன் (வயது 30), இவரின் கள்ளக்காதலி விஜயலட்சுமி (25), நரசய்யா (30), வேலூர் காட்பாடியைச் சேர்ந்த கார்த்திக் (40) என்பது தெரிய வந்தது. இந்தக் கும்பல், மதனப்பள்ளியில் கிரானைட் கற்கள் வியாபாரம் செய்து வரும் தொழில் அதிபரான ராதாகிருஷ்ணன் மற்றும் அவரின் மனைவி கலாவதியை மிரட்டி அவர்களிடம் ரூ.5 லட்சம் பணம் கேட்டு காரில் கடத்தி வந்து சித்தூரை அடுத்த குடிபாலா வனப்பகுதியில் சிறை வைத்திருப்பதாக கூறினர்.

இந்தத் தகவலை குடிபாலா போக்குவரத்துப்பிரிவு போலீசார், மதனப்பள்ளி போலீசாருக்கு தெரிவித்தனர். மதனப்பள்ளி போலீசில், தொழில் அதிபர் ராதாகிருஷ்ணன்–கலாவதி தம்பதியரை காணவில்லை எனப் புகார் வந்துள்ளதாக அவர்கள் கூறினர். இதையடுத்து மதனப்பள்ளி போலீசாரும், குடிபாலா போலீசாரும், 4 பேர் கொண்ட கும்பலை அழைத்துக்கொண்டு வனப்பகுதிக்குள் சென்றனர். அங்கு, தொழில் அதிபர் ராதாகிருஷ்ணன், மனைவி கலாவதி ஆகியோர் கடத்தி சிறை வைக்கப்பட்டு இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. அந்தத் தம்பதியரை போலீசார் பத்திரமாக மீட்டனர்.

வனப்பகுதிக்குள் கடத்தி சிறை வைக்கப்பட்ட தம்பதியருக்கு சித்தூர் முருக்கம்பட்டு பகுதியைச் சேர்ந்த குசேலன் (45), குடிபாலாவைச் சேர்ந்த ரவி (40), பெருமாள் (35), தேசிங் (45), வேலூர் மாவட்டம் ஆற்காடு பகுதியைச் சேர்ந்த ராஜு (40), மதனப்பள்ளியைச் சேர்ந்த ஜெகதீசன் (35) ஆகியோர் காவல் காத்து வந்ததாக கூறினர். இதையடுத்து மேற்கண்ட 6 பேரும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ஒரு கைத்துப்பாக்கி, 3 கார்கள், செல்போன்கள், கெடிகாரம், 5 பவுன் சங்கிலி, ஆயிரம் ரூபாய் ரொக்கம், கத்தி உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக சித்தூர் குடிபாலா போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story