காட்டுயானை அட்டகாசத்தை தடுக்கக்கோரி மறையூரில் முழு அடைப்பு போராட்டம்


காட்டுயானை அட்டகாசத்தை தடுக்கக்கோரி மறையூரில் முழு அடைப்பு போராட்டம்
x
தினத்தந்தி 20 July 2017 3:45 AM IST (Updated: 20 July 2017 3:42 AM IST)
t-max-icont-min-icon

காட்டுயானை அட்டகாசத்தை தடுக்கக்கோரி மறையூரில் முழு அடைப்பு போராட்டம் நடந்தது. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

மறையூர்,

இடுக்கி மாவட்டம் மறையூர் குண்டகாடு பகுதியை சேர்ந்தவர் பாஸ்கரன். அவருடைய மனைவி சரோஜினி (வயது 65). அவர்களுடைய மகள் பேபி (24). இவர் வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்த போது காட்டுயானை தாக்கி இறந்தார். அவரை காப்பாற்ற முயன்ற அவருடைய தாயார் சரோஜினி படுகாயம் அடைந்தார். அவர் கோட்டயம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதைத்தொடர்ந்து காட்டுயானை அட்டகாசத்தை தடுக்கக்கோரி, பேபியின் உடலை சாலையில் வைத்து அவருடைய உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். இதையடுத்து தேவிகுளம் தாசில்தார் மற்றும் அதிகாரிகள் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இறந்த பேபியின் குடும்பத்தினருக்கு நஷ்டஈடு வழங்க வேண்டும் என்றும், காட்டுயானையை நிரந்தரமாக வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது. இதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு பேபியின் உடலை எடுத்து கொண்டு அடக்கம் செய்தனர்.

இந்தநிலையில் காட்டுயானை அட்டகாசத்தை தடுக்கக்கோரியும், பொதுமக்களின் உயிருக்கும், உடைமைக்கும் பாதுகாப்பு அளிக்கக்கோரியும் நேற்று மறையூரில் முழு அடைப்பு போராட்டம் நடந்தது. இதையொட்டி மறையூரில் சிறிய கடைகள் முதல் பெரிய கடைகள் வரை அனைத்தும் அடைக்கப்பட்டிருந்தன.

இதனால் பொதுமக்கள் நடமாட்டமின்றி சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. பஸ், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் ஓடவில்லை. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. சுற்றுலா இடங்களும் வெறிச்சோடின.

இந்தநிலையில் குடியிருப்பு பகுதிகளுக்குள் காட்டுயானை புகாமல் தடுக்க வனத்துறை அதிரடிப்படை குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் 8 பேர் இடம் பெற்றுள்ளனர். துப்பாக்கி ஏந்தி வனப்பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் அவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். காட்டுயானை புகும் இடங்களுக்கு விரைந்து சென்று அதனை விரட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.


Next Story