ஸ்ரீவைகுண்டம் ஜெயிலில் இருந்து கைதி தப்பி ஓட்டம் ‘திருச்செந்தூர் கோவிலில் போலீஸ்காரரை தாக்கியவர்’


ஸ்ரீவைகுண்டம் ஜெயிலில் இருந்து கைதி தப்பி ஓட்டம் ‘திருச்செந்தூர் கோவிலில் போலீஸ்காரரை தாக்கியவர்’
x
தினத்தந்தி 21 July 2017 2:30 AM IST (Updated: 21 July 2017 12:28 AM IST)
t-max-icont-min-icon

ஸ்ரீவைகுண்டம் ஜெயிலில் இருந்து கைதி தப்பி ஓட்டம் பிடித்தார். இவர், திருச்செந்தூர் கோவீலில் போலீஸ்காரரை தாக்கியவர் ஆவார்.

ஸ்ரீவைகுண்டம்,

ஸ்ரீவைகுண்டம் ஜெயிலில் இருந்து கைதி தப்பி ஓட்டம் பிடித்தார். இவர், திருச்செந்தூர் கோவீலில் போலீஸ்காரரை தாக்கியவர் ஆவார். இவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:–

போலீஸ்காரரை பாட்டிலால் தாக்கியவர்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணியபுரம் மணல்மேடு பகுதியைச் சேர்ந்தவர் முருகன். இவருடைய மகன் மணிகண்டன் என்ற எலி (வயது 29). இவர் கடந்த 26–4–2017 அன்று திருச்செந்தூர் கோவிலில் வாகன நிறுத்தும் இடத்தில் நின்று பக்தர்களை அவதூறாக பேசி கொண்டிருந்ததாக தெரிகிறது. அந்த வழியாக ரோந்து சென்ற, மணிமுத்தாறு பட்டாலியனைச் சேர்ந்த போலீஸ்காரர் மரிய ஜெகதீஷ் (23), மணிகண்டனை கண்டித்தார்.

இதில் ஆத்திரம் அடைந்த மணிகண்டன் பாட்டிலால் மரிய ஜெகதீசை தாக்கியதாக கூறப்படுகிறது. காயம் அடைந்த மரிய ஜெகதீஷ் திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். இதுகுறித்த புகாரின்பேரில், திருச்செந்தூர் கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மணிகண்டனை கைது செய்து, ஸ்ரீவைகுண்டத்தில் உள்ள மாவட்ட ஜெயிலில் அடைத்தனர்.

தப்பி ஓட்டம்

இந்த நிலையில் நேற்று மதியம் ஸ்ரீவைகுண்டம் ஜெயிலில் கைதிகளுக்கு உணவு வழங்கப்பட்டது. பின்னர் கைதிகளை மீண்டும் அவரவர் அறைகளுக்கு அனுப்புவதற்காக ஒவ்வொருவராக எண்ணினர். அப்போது விசாரணை கைதியாக அடைக்கப்பட்டு இருந்த மணிகண்டன், ஜெயிலில் இருந்து மாயமானது தெரிய வந்தது.

உடனே ஜெயில் காவலர்கள், ஜெயில் வளாகம் முழுவதும் தேடியும், மணிகண்டனை கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே பாளையங்கோட்டை சிறைத்துறை சூப்பிரண்டு செந்தாமரை கண்ணன் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.

போலீஸ் வலைவீச்சு

ஸ்ரீவைகுண்டம் தாலுகா அலுவலக வளாகத்தில்தான் மாவட்ட ஜெயில் வளாக நுழைவுவாயில் உள்ளது. ஜெயிலை ஒட்டியவாறு அமைந்துள்ள தாலுகா அலுவலக கட்டிட மேற்கூரையின் வழியாக மணிகண்டன் ஏறி தப்பி சென்றது தெரிய வந்தது. மதியம் தாலுகா அலுவலக மேற்கூரையில் இருந்து சத்தம் கேட்டதாகவும், அப்போது அதில் பூனை அல்லது குரங்கு ஏதேனும் நடந்து சென்றிருக்கலாம் என்று கருதியதாகவும் தாலுகா அலுவலக ஊழியர்கள் தெரிவித்தனர்.

ஜெயிலில் இருந்து கைதி தப்பி ஓடியது குறித்து ஸ்ரீவைகுண்டம் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில், போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் வழக்குப்பதிவு செய்து, தப்பி ஓடிய கைதி மணிகண்டனை வலைவீசி தேடி வருகிறார். ஸ்ரீவைகுண்டம் ஜெயிலில் இருந்து கைதி தப்பி ஓடிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story