நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க கோரி சாலை மறியலில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் 564 பேர் கைது


நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க கோரி சாலை மறியலில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் 564 பேர் கைது
x
தினத்தந்தி 25 July 2017 10:30 PM GMT (Updated: 2017-07-26T00:09:52+05:30)

நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க கோரி மாவட்டம் முழுவதும் சாலை மறியல் மற்றும் தர்ணா போராட்டம் நடத்திய இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் 564 பேரை போலீசார் கைது செய்தனர்.

கடலூர்,

இந்தி திணிப்பை மத்திய அரசு கைவிடவேண்டும், ‘நீட்’ தேர்வில் இருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு அளிக்கவேண்டும், ஜி.எஸ்.டி. வரியை மறுபரிசீலனை செய்யவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மாநிலம் முழுவதும் மத்திய–மாநில அரசு அலுவலகங்கள் முன்பு நேற்று மறியல் போராட்டம் நடைபெற்றது.

கடலூர் மஞ்சக்குப்பம் அம்பேத்கார் சிலை அருகே மாவட்ட துணை செயலாளர் குளோப் தலைமையில் அக்கட்சியினர் மறியல் செய்ய திரண்டு வந்தனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால், அங்கிருந்த தலைமை தபால் நிலையம் முன்பு அமர்ந்து திடீர் தர்ணா போராட்டம் செய்தனர்.

இதையடுத்து தடையை மீறி போராட்டம் செய்ததாக மாவட்ட துணை செயலாளர் குளோப், ஏ.ஐ.டி.யூ.சி. மாவட்ட தலைவர் மாரியப்பன், தேசிய டெலிபோன் ஊழியர்கள் கூட்டமைப்பின் முன்னாள் மாநில தலைவர் தமிழ்மணி, இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் நகர செயலாளர் அரிகிருஷ்ணன், துணை செயலாளர் துரைராஜ், பொருளாளர் மணிகண்டன், வட்டக்குழு உறுப்பினர்கள் அம்மாவாசை, பாக்கியம், துரைரங்கன், கிருஷ்ணன், பழனி உள்பட 110 பேரை போலீசார் கைது செய்து அங்குள்ள திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனர்.

சிதம்பரம் தலைமை தபால் அலுவலகம் முன்பு வட்ட செயலாளர் அன்பழகன் தலைமையில், நகர செயலாளர் தமிமுன்அன்சாரி, வட்ட தலைவர் மரியம்பீவி, சித்ரா ஆகியோர் முன்னிலையில் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். அப்போது அங்கு வந்த சிதம்பரம் நகர போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி 42 பெண்கள் உள்பட 75 பேரை கைது செய்தனர்.

புவனகிரி தபால் நிலையம் எதிரே நகர செயலாளர் விஸ்வலிங்கம் தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்ட 3 பெண்கள் உள்பட 33 பேர், பெண்ணாடத்தில் ஒன்றிய செயலாளர் தமிழரசன் தலைமையில் மறியலில் ஈடுபட்டதாக 30 பேர், கருவேப்பிலங்குறிச்சியில் மாவட்டக்குழு உறுப்பினர் வில்வநாதன் தலைமையில் மறியலில் ஈடுபட்ட 35 பேர், குறிஞ்சிப்பாடியில் மாநிலக்குழு உறுப்பினர் சுப்பிரமணியன் தலைமையில் சாலை மறியல் செய்த 15 பேர், ஸ்ரீமுஷ்ணத்தில் வட்ட செயலாளர் செல்வராஜ் தலைமையில் மறியலில் ஈடுபட்ட 56 பேர், காட்டுமன்னார்கோவிலில் மாநிலக்குழு உறுப்பினர் நாகராஜன் தலைமையில் மறியல் செய்த 17 பேர், பண்ருட்டியில் ஒன்றிய செயலாளர் துரை தலைமையில் மறியல் செய்த 150 பேர், திட்டக்குடியில் நகர செயலாளர் சின்னதுரை தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்ட 46 பேர் என மாவட்டம் முழுவதும் 564 பேரை போலீசார் கைது செய்தனர்.


Next Story