காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியல் 225 பேர் கைது


காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியல் 225 பேர் கைது
x
தினத்தந்தி 25 July 2017 11:00 PM GMT (Updated: 25 July 2017 6:53 PM GMT)

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் 225 பேரை போலீசார் கைது செய்தனர்.

பேராவூரணி,

காவிரி மேலாண்மை வாரியம், ஒழுங்காற்று குழு ஆகியவற்றை அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் பேராவூரணி தலைமை தபால் நிலையம் அருகே நேற்று சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இதற்கு மாநிலக்குழு உறுப்பினர் பா.பாலசுந்தரம், ஒன்றியச் செயலாளர் ப.காசிவிஸ்வநாதன் ஆகியோர் தலைமை தாங்கினர் வகித்தனர். ஒன்றிய துணைச் செயலாளர்கள் வி.ராஜமாணிக்கம், டி.ரவி, ஒன்றிய பொருளாளர் கோ.பன்னீர்செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். காவிரி மேலாண்மை வாரியம், ஒழுங்காற்று குழு ஆகியவை அமைக்க வேண்டும்.

விவசாயிகள் அனைத்து பயிர் கடன்களையும் ரத்து செய்ய வேண்டும். ஜி.எஸ்.டி. வரி சட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும். இந்தி திணிப்பை கைவிட வேண்டும். விவசாய தொழிலாளர்களுக்கு நிவாரணமாக ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும். எய்ம்ஸ் மருத்துவமனையை செங்கிப்பட்டியில் அமைக்க வேண்டும். ஹைட்ரோ கார்பன், ஷேல்எரிவாயு, மீத்தேன் எரிவாயு எடுக்கும் திட்டங்களை கைவிட வேண்டும். நீட் நுழைவுத்தேர்வில் தமிழகத்திற்கு விதிவிலக்கு அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் மறியல் போராட்டத்தில் வலியுறுத்தி கோ‌ஷங்கள் எழுப்பப்பட்டன. போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்டு நகர செயலாளர் எம்.சித்திரவேலு, ஏ.ஐ.டி.யூ,சி. கே.எஸ்.முருகேசன், ஆ.கருப்பையா, எஸ்.கோவிந்தராசு, வி.கோபால் மற்றும் பெண்கள் 30 பேர் உள்ளிட்ட 92 பேரை போலீசார் கைது செய்தனர்.

இதே போல இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஒரத்தநாடு தாசில்தார் அலுவலகம் முன்பு கட்சியின் மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் பன்னீர்செல்வம் தலைமையில் சாலை மறியல் நடைபெற்றது. இதில் ஈடுபட்ட 73 பேர்களை ஒரத்தநாடு போலீசார் கைது செய்தனர். திருவோணம் ஒன்றியம் ஊரணிபுரம் தபால் நிலையம் முன்பு மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் கல்யாணசுந்தரம் தலைமையில் மறியலில் ஈடுபட்ட 34 பேர்களை திருவோணம் போலீசார் கைது செய்தனர்.

கும்பகோணம் அருகே உள்ள ஆடுதுறை கடைவீதியில் உள்ள தபால் நிலையம் முன்பு இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் ஆர்.தில்லைவனம் தலைமை தாங்கினார். காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் ஒழுங்காற்று குழுவை உடனே அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் கோ‌ஷம் எழுப்பப்பட்டன. திருவிடைமருதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் தலைமையிலான போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட 26 பேரை கைது செய்தனர்.

பேராவூரணி, ஒரத்தநாடு மற்றும் திருவோணம், ஆடுதுறையில் நடந்த சாலை மறியல் போராட்டத்தில் மொத்தம் 225 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


Next Story