அமராவதி ஆற்றில் தண்ணீர் திறக்கக்கோரி மூலனூரில் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம், 200 பேர் கைது


அமராவதி ஆற்றில் தண்ணீர் திறக்கக்கோரி மூலனூரில் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம், 200 பேர் கைது
x
தினத்தந்தி 25 July 2017 10:45 PM GMT (Updated: 25 July 2017 8:15 PM GMT)

அமராவதி ஆற்றில் தண்ணீர் திறக்கக்கோரி தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதை தொடர்ந்து முன்னாள் அமைச்சர் உள்பட 200 பேரை போலீசார் கைது செய்தனர்.

மூலனூர்,

அமராவதி அணையில் தற்போது நீர்மட்டம் 54.69 அடியாக உள்ளது. எனவே அணையில் இருந்து குடிநீருக்காக ஆற்றில் உயிர் நீர் திறந்து விட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள். ஆனால் இதுவரை ஆற்றில் இருந்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் தண்ணீர் திறந்துவிடவில்லை.

இதனால் ஆற்றில் தண்ணீர் திறக்க மறுக்கும் பொதுப்பணித்துறை அதிகாரிகளை கண்டித்தும், தமிழக அரசை கண்டித்தும் நேற்று திருப்பூர் தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் மூலனூரை அடுத்த ஒத்தமாந்துறை பாலம் அருகே அமராவதி ஆற்றங்கரையில் ஆர்ப்பாட்டம் நடத்த அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் இந்த ஆர்ப்பாட்டத்துக்கு போலீசார் அனுமதி அளிக்கவில்லை.

இதனால் தடையை மீறி நேற்று காலை தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு தி.மு.க. மாநில இளைஞர் அணி செயலாளரும், முன்னாள் அமைச்சருமான மு.பெ.சாமிநாதன் தலைமை தாங்கினார். தி.மு.க. தெற்கு மாவட்ட செயலாளர் இல.பத்மநாபன், தாராபுரம் எம்.எல்.ஏ. காளிமுத்து மற்றும் காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர் தென்னரசு ஆகியோர் முன்னிலைவகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில், தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் பழனிசாமி (மூலனூர்), பாலசுப்பிரமணி (வெள்ளகோவில்), உழவர் உழைப்பாளர் கட்சி ஒன்றிய செயலாளர் குருசாமி, கொ.ம.தே.க. நடராஜ், தமிழக வாழ்வுரிமை கட்சியின் மாவட்ட செயலாளர் ரமேஷ், ஜீவா தொழிற்சங்க நிர்வாகி துரைசாமி, வட்டார காங்கிரஸ் தலைவர் துரைசாமி உள்பட அனைத்து கட்சி நிர்வாகிகள், விவசாயிகள் உள்பட திரளானோர் கலந்து கொண்டனர்.

தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடந்ததால், போலீசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் மு.பெ.சாமிநாதன், காளிமுத்து எம்.எல்.ஏ. உள்பட 200 பேரை கைது செய்தனர். பின்னர் அனைவரும் அருகில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டு மாலையில் விடுவிக்கப்பட்டனர்.


Next Story