இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் மறியல் போராட்டம் 265 பேர் கைது


இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் மறியல் போராட்டம் 265 பேர் கைது
x
தினத்தந்தி 25 July 2017 10:45 PM GMT (Updated: 25 July 2017 9:15 PM GMT)

தர்மபுரி மாவட்டத்தில் 9 இடங்களில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பங்கேற்ற 265 பேரை போலீசார் கைது செய்தனர்.

தர்மபுரி,

இந்தி திணிப்பை கண்டித்தும், நீர்தேர்வுக்கு விலக்கு அளிக்க கோரியும் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் தர்மபுரி மாவட்டத்தில் 9 இடங்களில் மறியல் போராட்டம் நடைபெற்றது. தர்மபுரி 4 ரோட்டில் நடந்த மறியல் போராட்டத்திற்கு நகர செயலாளர் துரைசாமி தலைமை தாங்கினார். மாநில குழு உறுப்பினர் மாதேஸ்வரன் மற்றும் நிர்வாகிகள் மறியல் போராட்டத்தில் கலந்து கொண்டனர். இந்த மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.

இதேபோல் பென்னாகரம் பஸ் நிலையம் அருகில் ஒன்றிய செயலாளர் முனியப்பன் தலைமையில் மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில் முன்னான் எம்.எல்.ஏ.நஞ்சப்பன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். ஏரியூரில் வட்டார செயலாளர் காதர் தலைமையிலும், பெரும்பாலையில் வட்டார செயலாளர் சிவன் தலைமையிலும் மறியல் போராட்டம் நடைபெற்றது.

நல்லம்பள்ளியில் வட்டார செயலாளர் மாசிலாமணி தலைமையிலும், பாப்பாரப்பட்டியில் மாவட்ட செயலாளர் தேவராஜன், வட்டார செயலாளர் புள்ளாரு ஆகியோர் தலைமையிலும், இண்டூரில் வட்டார செயலாளர் சிவன் தலைமையிலும் மறியல் போராட்டம் நடைபெற்றது. கம்பைநல்லூரில் ஒன்றிய செயலாளர் தனபால் தலைமையிலும், அரூரில் மாவட்ட துணை செயலாளர் தமிழ்குமரன் தலைமையிலும் மறியல் போராட்டம் நடைபெற்றது.

அப்போது தமிழகத்தில் இந்தியை மத்திய அரசு திணிக்க கூடாது. நீட்தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும். விவசாயிகளின் அனைத்து கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மறியல் போராட்டத்தில் பங்கேற்றவர்கள் கோஷங்கள் எழுப்பினர். மாவட்டம் முழுவதும் 9 இடங்களில் நடந்த இந்த மறியல் போராட்டத்தில் 42 பெண்கள் உள்பட 265 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர். 

Related Tags :
Next Story