காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை: ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 5,200 கனஅடியாக அதிகரிப்பு


காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை: ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 5,200 கனஅடியாக அதிகரிப்பு
x
தினத்தந்தி 25 July 2017 11:00 PM GMT (Updated: 2017-07-26T02:50:00+05:30)

கர்நாடக காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை: ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 5,200 கனஅடியாக அதிகரிப்பு

பென்னாகரம்,

கர்நாடக மாநில காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் ஆகிய அணைகளுக்கு அதிகளவு தண்ணீர் வருவதால் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. இதனால் இந்த அணைகளில் இருந்து உபரிநீர் காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இந்த தண்ணீர் தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவை கடந்து ஒகேனக்கல்லுக்கு வருகிறது. நேற்று முன்தினம் ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 2,000 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது.

இந்தநிலையில் கர்நாடக மாநில காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதாலும், அங்குள்ள அணைகளில் இருந்து கூடுதலாக உபரிநீர் திறந்து விடப்பட்டுள்ளதாலும் ஒகேனக்கல்லுக்கு நேற்று காலை முதலே நீர்வரத்து படிப்படியாக அதிகரித்தது. இந்த நீர்வரத்து மாலை 5 மணி நிலவரப்படி வினாடிக்கு 5,200 கனஅடியாக அதிகரித்தது. தண்ணீர் வரத்தை மத்திய நீர்பாசனத்துறை அலுவலர்கள் பிலிகுண்டுலுவில் காவிரி ஆற்றில் பரிசலில் சென்று அளந்து கண்காணித்து வருகின்றனர்.

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்ததால் காவிரி ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடி, மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் போலீசார் மற்றும் ஊர் காவல் படையினர் மெயின் அருவி, நடைபாதை மற்றும் காவிரி கரையோர பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். 

Related Tags :
Next Story