மதுக்கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து கருப்புக்கொடியுடன் கிராம மக்கள் சாலை மறியல்


மதுக்கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து கருப்புக்கொடியுடன் கிராம மக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 26 July 2017 11:00 PM GMT (Updated: 26 July 2017 7:15 PM GMT)

சேதுபாவாசத்திரம் அருகே மதுக்கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் கருப்புக்கொடியுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் 2 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சேதுபாவாசத்திரம்,

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின் படி தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலை மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் இருந்த மதுக்கடைகள் மூடப்பட்டன. இதை தொடர்ந்து வேறுபகுதியில் மதுக்கடை திறக்க டாஸ்மாக் நிர்வாகம் நட வடிக்கை எடுத்து வருகிறது. பல்வேறு இடங்களில் குடியிருப்பு பகுதியில் கடை அமைக்கப்படுவதால் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம் ஒன்றியம் மணக்காடு பகுதியில் புதிதாக மதுக்கடை திறக்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இதை அறிந்த மணக்காடு, வீரக்குடி, ரெட்டவயல், கொளக்குடி, அமரசிம்மேந்திரபுரம் கிராம ஊராட்சிகளை சேர்ந்த பொதுமக்கள் மூலம் ஏற்படுத்தப்பட்டுள்ள டாஸ்மாக் மதுபான எதிர்ப்பு கூட்டமைப்பு சார்பில் பட்டுக்கோட்டை கோட்டாட்சியர் கோவிந்தராசுக்கு ஒரு கோரிக்கை மனு அனுப்பினர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

சேதுபாவாசத்திரம் ஒன்றியம் மணக்காடு பகுதியில் ஒருவருக்கு சொந்தமான இடத்தில் மதுக்கடை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பகுதியில் மாலை, இரவு நேரங்களில் போதிய அளவில் பஸ் வசதி இல்லாததால், ரெட்டவயல் - மணக்காடு சாலையில் பெண்கள், மாணவிகள் தனியே நடந்து வரும்போது மதுக்குடிக்க வருபவர்களால் பிரச்சினை ஏற்படும். எனவே மதுக்கடை அமைக்க அனுமதிக்க கூடாது என்று தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில் மதுக்கடை திறப்பதற்கான பணிகள் தொடர்ந்து நடைபெற்று வந்தது. இதனால் ஆத்திரம் அடைந்த மணக்காடு மற்றும் அதை சுற்றியுள்ள கிராம மக்கள் மதுக்கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து நேற்று காலை 11 மணியளவில் ரெட்டவயல் கடைவீதியில் 200 பெண்கள் உள்ளிட்ட 300 பேர் கருப்புக் கொடியுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்டக்குழு உறுப்பினர் வக்கீல் கருப்பையன், விவசாய சங்க நிர்வாகி கொரட்டூர் நீலகண்டன், விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் குணவழகன், ஆத்மநாதன், இந்திய கம்யூனிஸ்டு நாகலிங்கம், மணக்காடு ஆறுமுகம், ரெட்டவயல் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் கண்ணன், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர்கள் மணக்காடு செல்வராஜ், நெல்லியடிக்காடு மதியழகன் உள்பட பலர் கலந்து கொண்டனர். அப்போது மதுக்கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.

இதுகுறித்து தகவல் அறிந்த பேராவூரணி போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) அன்பழகன்,சப்- இன்ஸ்பெக்டர்கள் மதியழகன், செல்வராஜ், வருவாய் ஆய்வாளர் சத்தியராஜ் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து மறியலில் ஈடுபட்ட கிராம மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் இன்று(வியாழக்கிழமை) பேராவூரணி தாசில்தார் அலுவலகத்தில் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி, தீர்வு காணப்படும் என்று அதிகாரிகள் உறுதியளித்தனர். இதை தொடர்ந்து சாலை மறியலை கைவிட்டு கிராம மக்கள் கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் 2 மணிநேரம் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது. 

Related Tags :
Next Story