ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 6,200 கனஅடியாக அதிகரிப்பு


ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 6,200 கனஅடியாக அதிகரிப்பு
x
தினத்தந்தி 26 July 2017 11:15 PM GMT (Updated: 26 July 2017 9:11 PM GMT)

ஒகேனக்கல்லில் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 6,200 கனஅடியாக நேற்று அதிகரித்தது. இதனால் பரிசல்கள் இயக்க தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.

பென்னாகரம்,

கர்நாடக மாநிலத்தில் உள்ள காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கபினி, கிருஷ்ணராஜசாகர் ஆகிய அணைகளில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. இதனால் இந்த அணைகளில் இருந்து உபரிநீர் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டது. இதன் காரணமாக கடந்த 2 நாட்களாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்தது.

நேற்று முன்தினம் மாலை வினாடிக்கு 5,200 கனஅடி தண்ணீர் வந்தது. இந்த நீர் வரத்து அளவு நேற்று காலை வினாடிக்கு 6200 கனஅடியாக உயர்ந்தது. நேற்று மாலை வரை இதே அளவில் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இதன் காரணமாக ஒகேனக்கல்லில் உள்ள மெயின் அருவி, ஐந்தருவிகள், சினிபால்ஸ் அருவிஆகியவற்றில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்ததால் நேற்று ஒகேனக்கல்லில் பரிசல் இயக்கத்திற்கு தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டது. நீர்வரத்து அதிகரித்துள்ளதால் ஒகேனக்கல் அருவிகளில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்தனர். ஒகேனக்கல்லில் காவிரியாற்றின் கரையோர பகுதிகள் மற்றும் அருவிகள், அருவிகளுக்கு செல்லும் நடைபாதை ஆகிய பகுதிகளில் போலீசார், தீயணைப்பு படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். 

Related Tags :
Next Story