எதிர்க்கட்சிகளின் அமளியால் சட்டசபை 3 முறை ஒத்திவைப்பு


எதிர்க்கட்சிகளின் அமளியால் சட்டசபை 3 முறை ஒத்திவைப்பு
x
தினத்தந்தி 26 July 2017 10:30 PM GMT (Updated: 26 July 2017 9:25 PM GMT)

காட்கோபர் கட்டிட விபத்து குறித்து விவாதிக்க கோரி சட்டசபையில் நேற்று எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர்.

மும்பை,

காட்கோபர் கட்டிட விபத்து குறித்து விவாதிக்க கோரி சட்டசபையில் நேற்று எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர். இதனால், சபை 3 முறை ஒத்திவைக்கப்பட்டது.

மும்பை புறநகர் காட்கோபரில் இருந்த 4 மாடி கட்டிடம் நேற்று முன்தினம் திடீரென இடிந்து விழுந்து தரைமட்டமானது. இந்த விபத்தில், அந்த கட்டிடத்தில் வசித்து வந்த பச்சிளங்குழந்தை உள்பட 17 பேர் பரிதாபமாக பலியானார்கள். இந்த சம்பவம் மும்பையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த விபத்துக்கு காரணமான சிவசேனா பிரமுகர் சுனில் சித்தாப் என்பவரை போலீசார் கைது செய்தனர்.

இந்நிலையில், காட்கோபர் கட்டிட விபத்து குறித்து விவாதம் நடத்த வேண்டும் என்றும், இதற்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் சட்டசபையில் நேற்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின.

சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் ராதாகிருஷ்ண விகே பாட்டீல் கூறுகையில், ‘‘மும்பை மாநகராட்சி ஒரு சிலரது நலன்களை மட்டுமே பாதுகாக்க கூடிய தனியார் நிறுவனமாக மாறிவிட்டது. மாநகராட்சி பொதுசேவை அமைப்பாக மாறி, சாமானிய மக்களின் நலனை காக்க வேண்டும்’’ என்றார்.

மேலும், இந்த துயர சம்பவத்துக்கு அதிகாரத்தில் உள்ள சிலரே காரணம் என்று கூறிய அவர், இதில் தொடர்புடையவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இந்த விவகாரத்தில் சிவசேனாவை பாரதீய ஜனதா ஆதரிக்க கூடாது என்றும் குறிப்பிட்டார்.

தேசியவாத காங்கிரஸ் உறுப்பினர் அஜித்பவார் பேசுகையில், ‘‘காட்கோபர் கட்டிட விபத்துக்கு காரணமானவர்கள் மீது கொலை நோக்கத்துடன் கூடிய மரணத்தை விளைவித்தல் சட்டப்பிரிவின்கீழ் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று வலியுறுத்தினார்.

பா.ஜனதா உறுப்பினர் ராஜ் புரோகித் கூறுகையில், ‘‘விபத்துக்குள்ளான குடியிருப்புவாசிகள் ஏற்கனவே மாநகராட்சி அதிகாரிகளை சந்தித்து, தரைதளத்தில் நடைபெற்ற அங்கீகரிக்கப்படாத கட்டுமான பணி குறித்து புகார் தெரிவித்திருக்கின்றனர். பின்னர், அவர்களை சுனில் சித்தாப் மிரட்டியிருக்கிறார்’’ என்றார்.

இதைத்தொடர்ந்து, காட்கோபர் கட்டிட விபத்து குறித்து உடனடியாக விவாதம் நடத்தி அரசு தரப்பில் அறிக்கை வெளியிட வேண்டும் என்று எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஒருமித்து குரல் கொடுத்தனர். இதற்கு பதில் அளித்து பேசிய சட்டசபை விவகாரங்கள் துறை மந்திரி கிரிஷ் பாபத், ‘‘இந்த விவகாரம் குறித்து மாலை 4 மணிக்கு விவாதம் நடத்தி, அரசு தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்படும்’’ என்றார்.

இதனை ஏற்க மறுத்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள், உடனடியாக விவாதம் நடத்த கோரி அவையின் மையப்பகுதிக்கு வந்து அமளியில் ஈடுபட்டனர். அரசுக்கு எதிராக கோ‌ஷம் எழுப்பினர். எதிர்க்கட்சிகளின் இந்த அமளி காரணமாக சட்டசபை தொடர்ந்து 3 முறை ஒத்திவைக்கப்பட்டது.


Next Story