கார்கள், மோட்டார் சைக்கிள்கள் திருடிய சிறுவன் உள்பட 6 பேர் சிக்கினர்


கார்கள், மோட்டார் சைக்கிள்கள் திருடிய சிறுவன் உள்பட 6 பேர் சிக்கினர்
x
தினத்தந்தி 26 July 2017 10:03 PM GMT (Updated: 26 July 2017 10:03 PM GMT)

பத்ராவதி, தார்வாரில் கள்ளச்சாவியை பயன்படுத்தி கார்கள், மோட்டார் சைக்கிள்களை திருடிய சிறுவன் உள்பட 6 பேர் போலீசிடம் சிக்கியுள்ளனர்.

சிவமொக்கா

சிவமொக்கா மாவட்டம் பத்ராவதி டவுன் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இரவு நேரங்களில் வீட்டின் முன்பு நிறுத்தி இருக்கும் கார்கள், மோட்டார் சைக்கிள்களை மர்மநபர்கள் கள்ளச்சாவியை பயன்படுத்தி தொடர்ந்து திருடி வந்தனர். இதுதொடர்பாக பத்ராவதி டவுன் போலீஸ் நிலையத்தில் புகார்கள் வந்த வண்ணம் இருந்தன.

கார்கள், மோட்டார் சைக்கிளை திருடி வந்த மர்மநபர்களை பிடிக்க கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு முத்துராஜ் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் மர்மநபர்களை தீவிரமாக தேடிவந்தனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு பத்ராவதி நியூ டவுன் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த காரை தடுத்து நிறுத்திய போலீசார், காரில் இருந்த 5 பேரிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் 5 பேரும் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததால், சந்தேகம் அடைந்த போலீசார் அவர்கள் 5 பேரையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்தனர்.

விசாரணையில் அவர்கள் பத்ராவதி டவுனை சேர்ந்த புனித்(வயது 25), பிரதீப்(24), அந்தோணி(26), மஞ்சுநாத்(28), பாப்பண்ணா(30) என்பது தெரிந்தது.

மேலும் இவர்கள் 5 பேரும் சேர்ந்து பத்ராவதி டவுன் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இரவு நேரங்களில் வீட்டின் முன்பு நிறுத்தி இருக்கும் கார்கள், மோட்டார் சைக்கிள்களை கள்ளச்சாவியை பயன்படுத்தி திருடி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 5 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

கைதானவர்களிடம் இருந்து 2 கார்கள், 11 மோட்டார் சைக்கிள்கள், 2 மடிக்கணினி, 3 செல்போன்கள், 2 கம்ப்யூட்டர், ஒரு பிரிண்டிங் எந்திரம் ஆகியவை மீட்கப்பட்டன. மீட்கப்பட்ட பொருட்களின் மதிப்பு ரூ.7 லட்சம் ஆகும்.

இதுகுறித்து பத்ராவதி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைதான 5 பேரிடமும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேற்கண்ட தகவலை சிவமொக்கா மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அபினவ்கெரே நிருபர்களிடம் நேற்று தெரிவித்தார்.

இதேப்போல் தார்வார் தாலுகா வனகள்ளி கிராமத்தில் நேற்று முன்தினம் போலீசார் வாகன சோதனை நடத்தினர். அப்போது விலையுயர்ந்த மோட்டார் சைக்கிளை ஓட்டிக் கொண்டு 15–வயது நிரம்பிய ஒரு சிறுவன் வந்தான். அந்த சிறுவனை மடக்கி போலீசார் விசாரித்த போது, அவன் உன்கல் பகுதியை சேர்ந்த கோழிப்பண்ணை அதிபரான ரவிராஜ்(40) என்பவரின் மகன் என்று தெரியவந்தது.

மேலும் சிறுவனும், அவனது தந்தை ரவிராஜிம் சேர்ந்து தார்வார் டவுனில் இரவு நேரங்களில் நிறுத்தப்பட்டு இருந்த மோட்டார் சைக்கிள்கள், கார்களை கள்ளச்சாவியை பயன்படுத்தி திருடியது தெரிந்தது. இதையடுத்து அந்த சிறுவனை போலீசார் கைது செய்தனர். மேலும் கோழிப்பண்ணையில் நிறுத்தப்பட்டு இருந்த 3 கார்கள், 4 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுபற்றி தார்வார் புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள ரவிராஜை தேடிவருகின்றனர்.


Next Story