சட்டசபையை முற்றுகையிட முயற்சி: அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 3 பேர் கைது


சட்டசபையை முற்றுகையிட முயற்சி: அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 3 பேர் கைது
x
தினத்தந்தி 26 July 2017 11:00 PM GMT (Updated: 2017-07-27T03:53:29+05:30)

புதுவை சட்டசபையை முற்றுகையிட முயன்ற அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

புதுச்சேரி,

மருத்துவக் கல்லூரி மாணவர்கள் பிரச்சினையில் மாணவர்களுக்கு துரோகம் இழைப்பதாக புகார் தெரிவித்து காங்கிரஸ், தி.மு.க. கூட்டணி அரசை கண்டித்து தலைமை தபால் நிலையம் முன்பு அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அ.தி.மு.க. சட்டமன்ற கட்சி தலைவர் அன்பழகன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் பாஸ்கர், வையாபுரி மணிகண்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தின்போது அன்பழகன் எம்.எல்.ஏ. பேசியதாவது:–

மத்திய மருத்துவ கவுன்சில் ஆணைப்படி சுயநிதி கல்லூரிகளில் 50 சதவீத இடங்களை பெறவேண்டிய புதுச்சேரி காங்கிரஸ் அரசு 36 சதவீத இடங்களை மட்டும் இந்த ஆண்டு பெற்றுள்ளது. நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் மாநில இடஒதுக்கீடாக மற்ற மாநிலங்களில் பெறாத நிலையில் நாம் 137 இடங்களை பெற்று வந்தநிலையில், இந்த ஆண்டு அதிலும் நாம் ஒரு இடம்கூட பெறவில்லை.

தனியார் மருத்துவக்கல்லூரிகளில் 50 சதவீத இடத்தை பெற சட்டப்படி உரிய சட்ட வடிவத்தை அரசு கொண்டுவர வேண்டும் என்று அ.தி.மு.க. சார்பில் சட்டமன்றத்தில் பலமுறை வலியுறுத்தியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஜல்லிக்கட்டு, மாட்டுக்கறி பிரச்சினைக்கு எல்லாம் சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டுவந்த முதல்–அமைச்சர் மருத்துவக்கல்லூரி மாணவர்களுக்கு அரசு இடஒதுக்கீடாக 50 சதவீத சட்டத்தை கேட்டு ஏன் தீர்மானம் கொண்டுவரவில்லை?

ஒரு இடம்கூட தராமல் இயங்கும் நிகர்நிலை பல்கலைக்கழங்களின் மீது அரசு எடுத்த நடவடிக்கை என்ன? அவர்களின் நிகர்நிலை அந்தஸ்தை குறைக்க மத்திய அரசிடம் புதுவை அரசு ஏன் கோரிக்கை வைக்கவில்லை? நீட் தேர்வில் இருந்து புதுச்சேரி மாநிலத்திற்கு விலக்கு பெறுவதில் இதுவரை முதல்–அமைச்சர் நாராயணசாமி சிறு துரும்பைக்கூட கிள்ளிப் போடவில்லை.

வாரிய தலைவர்கள் நியமனத்திற்கு மத்திய மந்திரியை சந்தித்து சால்வைபோடும் நாராயணசாமி நீட் தேர்வு சம்பந்தமாக என்ன நடவடிக்கை எடுத்தார்? தமிழகத்தில் போராட எந்த பிரச்சினையும் இல்லாத நிலையில் நீட் தேர்வு சம்பந்தமாக தி.மு.க. செயல்தலைவர் மனிதசங்கிலி போராட்டத்தை அறிவித்துள்ளார்.

நீட் தேர்வு சம்பந்தமாக தமிழக அரசு விலக்குபெற மத்திய அரசிடம் தமிழக முதல்–அமைச்சர் உள்ளிட்ட அமைச்சர்கள் டெல்லியில் தங்கி இருந்து வலியுறுத்தி வரும் நிலையில் புதுச்சேரியில் அவசரம் அவசரமாக சென்டாக் மூலம் மருத்துவக்கல்லூரி மாணவர் சேர்க்கையை புதுச்சேரி அரசு நடத்தி முடித்துள்ளது. நிர்வாக இடத்திற்கு கலந்தாய்வு நடத்த முயற்சி செய்தது போன்ற அடுக்கடுக்கான தவறுகளை நாராயணசாமி திட்டமிட்டு மருத்துவக் கல்லூரி உரிமையாளர்களுக்கு சாதகமாக செய்து வருகிறார். மாணவர்கள் விரோத ஆட்சி நடத்தும் இந்த அரசை முடக்கம் செய்ய வேண்டும்.

இவ்வாறு அன்பழகன் எம்.எல்.ஏ. பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில் துணை செயலாளர்கள் கணேசன், பன்னீர்செல்வி, நாகமணி, நகர செயலாளர்கள் ரவீந்திரன், அன்பானந்தம், பிற அணி செயலாளர்கள் பாப்புசாமி, சுப்ரமணியன், ஞானவேல், தொகுதி செயலாளர்கள் கிருஷ்ணமூர்த்தி, செந்தில்முருகன், நாராயணன், பொன்னுசாமி, கலியபெருமாள், சிவக்குமார், தமிழ்ச்செல்வன், மணவாளன், சக்கரவர்த்தி, ஜானிபாய் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

ஆர்ப்பாட்ட முடிவில் புதுவை சட்டசபையை முற்றுகையிடுவதற்காக தலைமை தபால் நிலையத்தில் இருந்து அவர்கள் புறப்பட்டனர். ஆனால் போலீசார் தடுப்புகளை அமைத்து அவர்களை தடுத்தனர். அதையும் மீறி அ.தி.மு.க.வினர் செல்ல முயன்றனர்.

இதைத்தொடர்ந்து எம்.எல்.ஏ.க்கள் அன்பழகன், பாஸ்கர், வையாபுரி மணிகண்டன் உள்பட சுமார் 300 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் அனைவரும் கரிக்குடோனில் தங்க வைக்கப்பட்டனர். பின்னர் சிறிது நேரத்தில் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.


Next Story