விவசாயிகள் பயன்பெற தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது


விவசாயிகள் பயன்பெற தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது
x
தினத்தந்தி 26 July 2017 11:04 PM GMT (Updated: 2017-07-27T04:33:58+05:30)

விவசாயிகள் பயன்பெற தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது என்று மகேந்திரவாடியில் நடந்த மனுநீதி நாள் முகாமில் கலெக்டர் ராமன் கூறினார்

பனப்பாக்கம்

நெமிலி தாலுகாவில் உள்ள மகேந்திரவாடி, பெரப்பேரி, வெளிதாங்கிபுரம், கோடம்பாக்கம் ஆகிய கிராமங்களுக்கான சிறப்பு மனுநீதி நாள் மகேந்திரவாடி கிராமத்தில் நேற்று நடந்தது. முகாமுக்கு வேலூர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் என்.ஜி.பார்த்திபன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். ராணிப்பேட்டை உதவி கலெக்டர் (பொறுப்பு) அப்துல் முனீர் முன்னிலை வகித்தார். நெமிலி தாசில்தார் பாஸ்கரன் வரவேற்றார்.

முகாமில் முதியோர், விதவை உதவித்தொகை, பட்டா மாற்றம், சிறு, குறு விவசாயி சான்றிதழ் என 271 மனுக்கள் பெறப்பட்டன. அதில் 117 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது. 15 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. மீதமுள்ள மனுக்கள் பரிசீலனைக்கு எடுத்து கொள்ளப்பட்டது.

இதில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட கலெக்டர் ராமன் கலந்து கொண்டு 117 பயனாளிகளுக்கு ரூ.23 லட்சத்து 26 ஆயிரத்து 950 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசியதாவது:–

முதல் – அமைச்சர் ஆணையின்படி விவசாய பயன்பாட்டிற்காக மாநிலம் முழுவதும் ஏரிகளில் இருந்து வண்டல் மண்ணை விவசாயிகள் எடுத்து வருகிறார்கள். வேலூர் மாவட்டத்தில் 974 ஏரிகள் பட்டியலிடப்பட்டு, அந்த ஏரிகளில் இருந்து விவசாயிகள் வண்டல்மண் எடுக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதற்கான மனுக்கள் பெறப்பட்டு வருகின்றன. ஆனால் இதுவரை குறைவான விவசாயிகளே மனு அளித்து, ஏரிகளில் வண்டல் மண் எடுத்துள்ளனர்.

2½ லட்சம் விவசாயிகள் உள்ள வேலூர் மாவட்டத்தில் இதுவரை 4,500 விவசாயிகள் மட்டும் தான் வண்டல்மண் எடுத்து பயன் அடைந்துள்ளனர்.

நெமிலி தாலுகா அதிக ஏரிகள் கொண்ட தாலுகாவாகும். எனவே, விவசாயிகள் ஏரியில் இருந்து வண்டல்மண் எடுத்து பயன்பெற வேண்டும். விவசாயிகள் பயன்பெறும் வகையில் தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. வேலூர் மாவட்டத்தில் குடிமராமத்து பணி மூலம் 63 ஏரிகள் புனரமைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இவ்வாறு கலெக்டர் பேசினார்.


குடவரைக்கோவிலை பாதுகாக்க எம்.எல்.ஏ. கோரிக்கை

மகேந்திரவாடி கிராமத்தில் வரலாற்று சின்னமாக அமைந்துள்ள குடவரைக்கோவிலுக்கு பகல் மற்றும் இரவு நேரங்களில் மர்ம நபர்கள் வந்து செல்வதாக இப்பகுதி மக்கள் கூறுகின்றனர். அவர்கள் குடவரைக்கோவிலை சேதப்படுத்திவிட்டு செல்வதற்கான வாய்ப்புகள் உள்ளது. எனவே, வரலாற்று சிறப்புமிக்க குடவரைக்கோவிலை தொல்லியல் துறையினர் பாதுகாக்க மாவட்ட கலெக்டர் ராமன் பரிந்துரை செய்ய வேண்டும் என்று என்.ஜி.பார்த்திபன் எம்.எல்.ஏ. கோரிக்கை வைத்தார்.


Next Story