தமிழகத்தில் உள்ள அனைத்து சிறைகளிலும் கைதிகள் நல அலுவலர் பணியிடங்களை 6 மாதத்துக்குள் நிரப்ப வேண்டும்


தமிழகத்தில் உள்ள அனைத்து சிறைகளிலும் கைதிகள் நல அலுவலர் பணியிடங்களை 6 மாதத்துக்குள் நிரப்ப வேண்டும்
x
தினத்தந்தி 1 Aug 2017 6:00 AM IST (Updated: 31 July 2017 11:27 PM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் உள்ள அனைத்து சிறைகளிலும் கைதிகள் நல அலுவலர் பணியிடங்களை 6 மாதத்துக்குள் நிரப்ப வேண்டும் என்று உள்துறை செயலாளருக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

மதுரை,

மதுரையை சேர்ந்த வக்கீல் விஜய்பூமிநாதன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், ‘ சென்னை புழல் சிறை உள்பட தமிழகத்தில் உள்ள 9 மத்திய சிறைகள், பெண்களுக்கான சிறப்பு சிறைகள், சிறப்பு சிறைப்பள்ளிகள் ஆகியவற்றில் சிறைக்கைதி நல அலுவலர்களுக்கான பணியிடங்கள் கடந்த 2010–ம் ஆண்டு உருவாக்கப்பட்டன. ஆனால் தற்போது வரை அந்த நல அலுவலர் பணியிடங்கள் நிரப்பப்படவில்லை.

சிறைக்கைதிகளை தனித்தனியாக சந்தித்து அவர்களின் குறைகள் மற்றும் கோரிக்கைகளை கேட்டு அறிவது, அவர்களின் குடும்ப உறுப்பினர்களுடன் உள்ள உறவை பராமரிப்பது, கல்வி அறிவு இல்லாத கைதிகளுக்கு அடிப்படை கல்வி வழங்க முயற்சி எடுப்பது, மறுவாழ்வுப்பணிகளுக்கான முயற்சிகளை மேற்கொள்வது, தண்டனை காலம் முடிவடைந்தவுடன் சமூகத்துடன் இணக்கமாக வாழ வழிகாட்டுவது, அறிவுரை கூறுவது உள்ளிட்ட பல பணிகளை சிறைக்கைதி நல அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டும்.

இந்த பணிகள் முழுவதையும் சிறையில் உள்ள மற்ற அலுவலர்களால் செய்ய இயலாது. இதனால் சிறைக்கைதிகள் தங்களின் உரிமைகளைப் பெற முடியாமலும், தங்களது குறைகளை கூற இயலாமலும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். எனவே அனைத்து மத்திய சிறைகள், பெண்களுக்கான சிறப்பு சிறைகள் மற்றும் சிறைக் கைதிகளுக்கான சிறப்பு பள்ளிகளில் சிறைக்கைதிகள் நல அலுவலர்களை நியமிக்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் கே.கே.சசிதரன், ஜி.ஆர்.சுவாமிநாதன் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

விசாரணை முடிவில், தமிழகத்தில் உள்ள அனைத்து மத்திய சிறைகள், பெண்களுக்கான சிறப்பு சிறைகள் மற்றும் சிறைக் கைதிகளுக்கான சிறப்பு பள்ளிகளில் சிறைக்கைதி நல அலுவலர்களை 6 மாதத்துக்குள் நியமிக்க தமிழக அரசின் உள்துறை செயலாளர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்தனர்.


Next Story