கைத்தறி கூட்டுறவு சங்கங்களில் மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்


கைத்தறி கூட்டுறவு சங்கங்களில் மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்
x
தினத்தந்தி 1 Aug 2017 3:45 AM IST (Updated: 1 Aug 2017 12:33 AM IST)
t-max-icont-min-icon

கைத்தறி கூட்டுறவு சங்கங்களில் மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் இந்து மக்கள் கட்சியினர் மனு கொடுத்தனர்.

ஈரோடு,

ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட வருவாய் அதிகாரி ச.கவிதா தலைமை தாங்கினார். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் தங்களது கோரிக்கைகளை மனுக்களாக கொடுத்தனர்.

இந்து மக்கள் கட்சியினர் கையில் தராசுடனும், வாயில் கருப்பு துணி கட்டிக்கொண்டும் நூதன முறையில் ஈரோடு கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று மனு கொடுக்க வந்தனர். பின்னர் அவர்கள் மாவட்ட வருவாய் அதிகாரி கவிதாவை சந்தித்து புகார் மனு ஒன்றை கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறி இருந்ததாவது:-

ஈரோடு மாவட்டத்தில் இயங்கி வரும் 215 கைத்தறி கூட்டுறவு சங்கங்களில் பல ஆயிரம் கோடி ரூபாய் மோசடி நடந்துள்ளது. போலியான உறுப்பினர்கள் சேர்க்கை மற்றும் கைத்தறி ரகங்களை விசைத்தறியில் நெய்தல் போன்ற மோசடிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். எனவே அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவேண்டும். ஈரோடு மாவட்டத்தில் இயங்கி வரும் 50 கல் குவாரிகளில் பசுமை தீர்ப்பாயம் மற்றும் கனிமவள சட்டங்களை மீறி கனிம வளங்களை கொள்ளையடித்து வருகின்றனர். இவர்கள் இப்படி செய்வதினால் இயற்கை சூழல் மாசுபடுகிறது.

இவ்வாறு அவர்கள் அந்த மனுவில் கூறி இருந்தார்கள்.

பவானி அருகே உள்ள செட்டிபாளையம் செல்வநகர், கஸ்பாபேட்டை அருகில் உள்ள ஆலுச்சாம்பாளையம் ஆகிய பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் சீராக குடிநீர் வினியோகிக்க கோரி மாவட்ட வருவாய் அதிகாரியிடம் மனு கொடுத்தனர்.

தமிழ்நாடு மக்கள் உரிமை பாதுகாப்பு மையம் சார்பில் கொடுக்கப்பட்டு இருந்த மனுவில், ‘ஈரோடு மாநகராட்சி 57-வது வார்டுக்கு உட்பட்ட மோசிகீரனார் வீதி, ரங்கநாதன்வீதி, ஓம்காளியம்மன் கோவில் வீதி, பச்சியப்பா சந்து, ராஜராஜன்வீதி, கரிகாலன் வீதி, புதுகாவிரி ரோடு சந்து ஆகிய பகுதிகளில் பாதாள சாக்கடைக்காக ரோடுகளில் குழிகள் தோண்டப்பட்டு குழாய்கள் பதிக்கப்பட்டன.

ஆனால் ரோடுகள் சீரமைக்கப்படாததால் குண்டும் -குழியுமாக உள்ளது. எனவே மேற்கண்ட பகுதிகளில் விரைந்து தார்ரோடு போட நடவடிக்கை எடுக்கவேண்டும்.’ என்று கூறப்பட்டு இருந்தது.

இதேபோல் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஏராளமானோர் மனு கொடுத்தனர். மொத்தம் 264 மனுக்கள் பெறப்பட்டன. மனுக்களை பெற்றுக்கொண்ட மாவட்ட வருவாய் அதிகாரி, அதை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கொடுத்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் ஒருவருக்கு ரூ.5 ஆயிரத்து 500 மதிப்பிலான விலையில்லா சக்கர நாற்காலியை மாவட்ட வருவாய் அதிகாரி கவிதா வழங்கினார்.

கூட்டத்தில் மாவட்ட சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை கலெக்டர் எம்.பாபு, மாற்றுத்திறனாளிகள் நல அதிகாரி குமார், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அதிகாரி என்.ராமச்சந்திரன் மற்றும் அனைத்து துறை அதிகாரிகள், பொதுமக்கள் கலந்துகொண்டார்கள்.

Next Story