தமிழகத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் இல்லாமல் யாரும் ஆட்சி அமைக்க முடியாது


தமிழகத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் இல்லாமல் யாரும் ஆட்சி அமைக்க முடியாது
x
தினத்தந்தி 2 Aug 2017 7:30 AM IST (Updated: 2 Aug 2017 1:02 AM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் இல்லாமல் யாரும் ஆட்சி அமைக்க முடியாது என்று சேத்தியாத்தோப்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ஜி.கே.வாசன் பேசினார்.

சேத்தியாத்தோப்பு,

தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் சேத்தியாத்தோப்பு கடைவீதியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு கடலூர் மாவட்ட தலைவர் நெடுஞ்செழியன் தலைமை தாங்கினார். மாநில பொதுச்செயலாளர் அன்பு, கடலூர் கிழக்கு மாவட்ட தலைவர் ஞானசந்திரன், மத்திய மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன், மாநில செயற்குழு உறுப்பினர் ராமலிங்கம், மாவட்ட மகளிர் அணி தலைவி தனலட்சுமி கலைவாணன், எஸ்.சி., எஸ்.டி. மத்திய மாவட்ட தலைவர் சக்கரபாணி, ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயற்குழு உறுப்பினர் தமிழோவியம் வரவேற்றார்.

கூட்டத்தில் த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன், துணைத்தலைவர்கள் ஞானதேசிகன், பி.ஆர்.எஸ். வெங்கடேசன், பொதுச்செயலாளர் பாஷா ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். அப்போது, த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் பேசியதாவது:–

தமிழகத்தில் நடைபெற்று வரும் மக்களின் பல்வேறு பிரச்சினைகளுக்கு குரல் கொடுப்பது த.மா.கா. தான். திராவிட கட்சிகள் மக்களை ஏமாற்றி வருகிறது. 5 ஆண்டிற்கு ஒரு முறை திராவிட கட்சிகள் மாறி, மாறி ஆட்சி செய்தாலும் மக்களுக்காக யாரும் பாடுபடவில்லை.

தமிழகத்தில் எந்த ஒரு கட்சியும் தனித்து ஆட்சி செய்ய முடியாது. அது மறைந்த ஜெயலலிதாவோடு முடிந்துவிட்டது. இனி கூட்டணி ஆட்சி தான். அதற்கு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி இல்லாமல் யாரும் ஆட்சி அமைக்க முடியாது.

தமிழக விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும். நீட் தேர்வால் மாணவ–மாணவிகள் மனவேதனை அடைந்துள்ளனர். இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மீனவர்கள் பிரச்சினைக்கு மத்திய மாநில அரசு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். கதிராமங்கலம் போராட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.

நெய்வேலியில் என்.எல்.சி. நிறுவனத்திற்கு வீடு, நிலம் கொடுத்த தொழிலாளர்கள் இதுவரை பணிநிரந்தரம் செய்யவில்லை. உடனே பணிநிரந்தரம் செய்ய வேண்டும். ஒப்பந்த தொழிலாளர்களுக்கு பணி குறைப்பு நடவடிக்கையை கைவிட்டு என்.எல்.சி. நிர்வாகம் மாதத்தில் 26 நாட்கள் பணி வழங்க வேண்டும்.

இந்தியா முழுவதும் ஒரே மாதியான ஜி.எஸ்.டி.வரி தேவை தான். ஆனால், இந்த வரியால் தீப்பெட்டி உற்பத்தி தொழிலாளர்கள், பட்டாசு தொழிற்சாலை, நெசவாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இப்பிரச்சினைக்கு மத்திய அரசு முடிவு எடுக்காவிட்டால் இந்த மாதத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் போராட்டம் நடத்தப்படும்.

இவ்வாறு ஜி.கே.வாசன் பேசினார்.

கூட்டத்தில் கடலூர் நகர தலைவர் ரகுபதி, மாவட்ட இளைஞர் அணி செயலாளர் தஷ்ணா அய்யப்பன், புரட்சி மணி, வேல்முருகன், கமலகாண்டிபன், தரணிதரன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முடிவில் வட்டார தலைவர் கலைவாணன் நன்றி கூறினார்.


Next Story