கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவர் கொலை மனைவி, கள்ளக்காதலன் கைது
சாங்கிலி அருகே மனைவியின் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவர் கழுத்தை நெரித்து கொல்லப்பட்டார்.
சாங்கிலி,
சாங்கிலி அருகே மனைவியின் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவர் கழுத்தை நெரித்து கொல்லப்பட்டார். மனைவி, அவரது கள்ளக்காதலனை போலீசார் கைது செய்தனர்.
கள்ளக்காதல்சாங்கிலி மாவட்டம் பலூஸ் தாலுகா கோகவ் கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்த் ஷிண்டே (வயது 45). இவரது மனைவி அஞ்சனி. இவருக்கும் விகாஸ் சஜிராவ் (40) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்தனர். இதையறிந்த கோவிந்த் ஷிண்டே அதிர்ச்சி அடைந்தார்.
கள்ளக்காதலை கைவிடுமாறு மனைவியை கண்டித்தார். இருப்பினும், அஞ்சனியால் விகாஸ் சஜிராவுடன் பழகுவதை நிறுத்த முடியவில்லை. இதனால், கணவன்– மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. கணவன் உயிரோடு இருக்கும்வரையில் தனது கள்ளக்காதலனுடன் நெருங்கி பழக முடியாது என்ற எண்ணிய அஞ்சனி, கணவரை கொலை செய்ய முடிவு செய்தார்.
தேநீரில் விஷம்இதுபற்றி விகாஸ் சஜிராவிடம் கூறினார். இதைத்தொடர்ந்து, கோவிந்த் ஷிண்டேயை தீர்த்து கட்டுவது என அவர்கள் முடிவு செய்தனர். அதன்படி, சம்பவத்தன்று தேநீரில் விஷத்தை கலந்து கோவிந்த் ஷிண்டேக்கு அஞ்சனி கொடுத்தார். இதை குடித்த அவர், மயங்கி விழுந்தார். இதையடுத்து, அஞ்சனி மோட்டார் சைக்கிளில் அவரை ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றார்.
சிராளா தாலுகா பாவ்லேவாடி கிண்டி அருகே சென்றபோது, எதிரே வந்த கார் ஒன்று அவர்களது மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில், கோவிந்த் ஷிண்டே தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்தார். அப்போது, விகாஸ் சஜிராவ் தன்னுடைய நண்பர் ஒருவருடன் அங்கு வந்து, கோவிந்த் ஷிண்டேயின் வாயில் போதைப்பொருட்களை திணித்தார்.
கொலைபின்னர், அவரது கழுத்தை நெரித்தார். இதனால், கோவிந்த் ஷிண்டே துடிதுடித்து பரிதாபமாக இறந்துபோனார். இந்த ஒட்டுமொத்த சம்பவமும் அஞ்சனியின் கண்களுக்கு முன்பாகவே அரங்கேறியது. இதைத்தொடர்ந்து, அஞ்சனி, அவரது கள்ளக்காதலன் விகாஸ் சஜிராவ் உள்ளிட்ட 3 பேரும் அங்கிருந்து தப்பிவிட்டனர்.
தகவல் அறிந்து வந்த போலீசார், கோவிந்த் ஷிண்டேயின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதைத்தொடர்ந்து, போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி அஞ்சனியையும், விகாஸ் சஜிராவையும் கைது செய்தனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.