அபு ஆஸ்மி எம்.எல்.ஏ. மகனுக்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபர் கைது
அபு ஆஸ்மி எம்.எல்.ஏ. மகனுக்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
மும்பை,
அபு ஆஸ்மி எம்.எல்.ஏ. மகனுக்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
கொலை மிரட்டல்மராட்டிய மாநில சமாஜ்வாடி கட்சி தலைவர் அபு ஆஸ்மி எம்.எல்.ஏ.வின் மகன் பர்ஹான் ஆஸ்மி. இவரது மனைவி பிரபல நடிகை ஆயிஷா தாகியா. இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். ஆயிஷா தாகியா இந்து குடும்பத்தை சேர்ந்தவர் ஆவார். இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன் பர்ஹான் ஆஸ்மிக்கு ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசிய ஆசாமி இந்து பெண்ணை திருமணம் செய்திருப்பதால் அவரையும், அவரது குடும்பத்தாரையும் கொல்லப்போவதாகவும், மேலும் அவரின் குடும்பத்துக்கு சொந்தமான அலுவலகங்கள் மற்றும் வாகனங்களை குண்டு வைத்து தகர்க்க போவதாகவும் மிரட்டி இருக்கிறார்.
வாலிபர் கைதுஇதனால் அதிர்ச்சி அடைந்த பர்ஹான் ஆஸ்மி கொலை மிரட்டல் பற்றி மும்பை போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். இதில் பர்ஹான் ஆஸ்மிக்கு போனில் கொலை மிரட்டல் விடுத்த ஆசாமி புனேயில் இருந்து பேசியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
தொடர்ந்து நடத்திய தீவிர விசாரணையில், புனேயை சேர்ந்த ஸ்ரீபால் சவுத்ரி (வயது25) என்ற வாலிபர் தான் கொலை மிரட்டல் விடுத்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை அதிரடியாக கைது செய்தனர். அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.