நெடுஞ்சாலை விரிவாக்கத்துக்காக குடிசை வீடுகளை அகற்றக்கூடாது கலெக்டரிடம் பா.ம.க.வினர் மனு
கடலூர் உண்ணாமலை செட்டிச்சாவடியில் நெடுஞ்சாலை விரிவாக்கத்துக்காக குடிசை வீடுகளை அகற்றக்கூடாது என்று கலெக்டரிடம் பா.ம.க.வினர் மனு கொடுத்தனர்.
கடலூர்,
கடலூர் உண்ணாமலை செட்டிச்சாவடியில் நெடுஞ்சாலை விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. இதற்காக நெடுஞ்சாலைக்குரிய இடத்தில் சாலையின் இருபுறமும் உள்ள குடிசை வாசிகளை காலி செய்யுமாறு நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நோட்டீசு கொடுத்து உள்ளனர். இதற்காக நாளை மறுநாள்(சனிக்கிழமை) காலக்கெடு விதிக்கப்பட்டு உள்ளது.
திடீரென வீடுகளை காலி செய்யுமாறு அதிகாரிகள் நோட்டீசு கொடுத்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். வீடுகளை அகற்றினால் தங்குவதற்கு வேறு இடமில்லாததால், கலெக்டரை சந்தித்து மனு கொடுப்பதற்காக அவர்கள் புதிய கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். இதனைத்தொடர்ந்து பா.ம.க. மாநில துணைப்பொதுச்செயலாளர் பழ.தாமரை கண்ணன், மாவட்ட செயலாளர் சண்.முத்துகிருஷ்ணன் ஆகியோரும் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர்.
கலெக்டர் அலுவலகத்தின் போர்டிகோவில் திரண்டு இருந்த மக்கள் மத்தியில் பேசுவதற்காக பழ.தாமரை கண்ணன் நின்று கொண்டு இருந்தார். இதனால் அவரிடம் போர்ட்டிகோவுக்கு வெளியே சென்று பேசுமாறு சப்–இன்ஸ்பெக்டர் பாக்கியராஜ் கூறினார். இதனால் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டருக்கும், பா.ம.க.நிர்வாகிகளுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து மற்ற போலீசார் அவர்களை சமாதானப்படுத்தினார்கள்.
இதன்பிறகு பழ.தாமரை கண்ணன் தலைமையில் பொதுமக்கள் கலெக்டர் ராஜேசை சந்தித்து மனு கொடுத்தனர். மனு கொடுத்து விட்டு வெளியே வந்த பழ.தாமரை கண்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:–
உண்ணாமலை செட்டிச்சாவடியில் சாலையோர குடிசைகளில் வசிப்பவர்களை வருகிற 5–ந்தேதிக்குள் காலி செய்யுமாறு அதிகாரிகள் நோட்டீசு கொடுத்து உள்ளனர். இது தொடர்பாக கலெக்டரை நேரில் சந்தித்து மனு கொடுத்தோம்.
குடிசைவாசி மக்களின் பிள்ளைகள் அருகில் உள்ள பள்ளிக்கூடங்களில் படிப்பதால் அவர்களை காலி செய்யச்சொன்னால் படிப்பு பாதிக்கப்படும். எனவே நடப்பு கல்வி ஆண்டு வரை வீடுகளை காலி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்று கலெக்டரிடம் வலியுறுத்தி உள்ளோம். அதை கலெக்டரும் ஏற்றுக்கொண்டு உள்ளார். அங்கு வசிப்பவர்களுக்கு மாற்று இடமும் வீடும் கட்டிக்கொடுக்க நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் தெரிவித்தார்.
இவ்வாறு பழ.தாமரை கண்ணன் கூறினார்.
இதேபோல் கோண்டூரில் சாலையோரம் வசித்தவர்களுக்கு திருமாணிக்குழியில் மாற்று இடம் வழங்கப்பட்டு உள்ளது. இதற்காக அவர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது. ஆனால் அந்த பட்டாவில் உள்ளபடி நிலத்தை அளந்து கொடுக்காததால், அவர்களும் மனு கொடுக்க வந்திருந்தனர்.