ஊழியரை தாக்கி பணத்தை கொள்ளையடித்தவர்களை கைது செய்ய வலியுறுத்தி டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

ஊழியரை தாக்கி பணத்தை கொள்ளையடித்தவர்களை கைது செய்ய வலியுறுத்தி தஞ்சையில் டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தஞ்சாவூர்,
தஞ்சை மாவட்ட சி.ஐ.டி.யூ. டாஸ்மாக் ஊழியர்கள் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் தஞ்சை ஆபிரகாம்பண்டிதர் சாலையில் நேற்று நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் எட்வின்ஆரோக்கியராஜ் தலைமை தாங்கினார்.
ஆர்ப்பாட்டத்தில் சி.ஐ.டி.யூ. மாவட்ட செயலாளர் ஜெயபால், மாவட்ட தலைவர் கோவிந்தராஜ், டாஸ்மாக் ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் வீரையன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
ஆர்ப்பாட்டத்தில் தொண்டராம்பட்டு டாஸ்மாக் கடை மேற்பார்வையாளர் குமார் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தி அவரிடம் இருந்து ரூ.1 லட்சத்து 93 ஆயிரத்து 62–ஐ கொள்ளையடித்து சென்ற சமூக விரோதிகளை கைது செய்ய வேண்டும். டாஸ்மாக் ஊழியர்களுக்கும், உடைமைகளுக்கும் பாதுகாப்பு வழங்கிட வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.
ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு சங்க நிர்வாகிகள் ராஜாராமன், முருகன், வெங்கடேசன் டாஸ்மாக் ஊழியர் சங்க மாவட்ட பொருளாளர் முருகேசன், மாநிலக்குழு உறுப்பினர் ராஜசேகரன், துணைத்தலைவர் கண்ணன், சுமைப்பணி மாவட்ட செயலாளர் முருகேசன், சி.ஐ.டி.யூ. மாவட்ட துணை செயலாளர் அன்பு, பேர்நீதிஆழ்வார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.