விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி கொலை: கூலித்தொழிலாளி கைது; 2 பேருக்கு வலைவீச்சு
விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி கொலை வழக்கில் கூலித்தொழிலாளி கைது செய்யப்பட்டார். மேலும் 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி,
விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி கொலை வழக்கில் கூலித்தொழிலாளி கைது செய்யப்பட்டார். மேலும் 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
கொலைதூத்துக்குடி 3 செண்ட் அந்தோணியார்புரத்தை சேர்ந்தவர் பாண்டியராஜ். இவருடைய மகன் டெய்சி அமிர்தராஜ் (வயது 29). விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒன்றிய நிர்வாகி ஆவார். இவர் தூத்துக்குடி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலகத்தில் தற்காலிக உதவியாளராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலையில் 3 செண்ட் பகுதியில் 3 பேர் கொண்ட கும்பல் டெய்சி அமிர்தராஜை வெட்டி கொலை செய்தது. இந்த சம்பவம் குறித்து தூத்துக்குடி தென்பாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஒருவர் கைதுமுதற்கட்ட விசாரணையில் டெய்சி அமிர்தராஜ், அதே பகுதியை சேர்ந்த அவரது உறவினர் சக்கரவர்த்தி என்பவரின் உறவுக்கார பெண்ணை விரும்பியதாக கூறப்படுகிறது. இதனால் டெய்சி அமிர்தராஜூக்கும் சக்கரவர்த்திக்கும் கடந்த 6 மாதங்களாக முன்விரோதம் இருந்தது. இந்த முன்விரோதத்தால் சக்கரவர்த்தி தனது நண்பர்களான அதே பகுதியை சேர்ந்த ராஜா, முத்து ஆகியோருடன் சேர்ந்து கொலை செய்து இருக்கலாம் என்று போலீசார் சந்தேகித்தனர்.
இதையடுத்து தூத்துக்குடி தென்பாகம் போலீசார், 3 செண்ட் பகுதியை சேர்ந்த முத்து (29) என்பவரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் முத்து, அந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டு இருப்பது தெரியவந்தது. இதனால் போலீசார் கூலித்தொழிலாளியான முத்துவை கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தலைமறைவாக உள்ள சக்கரவர்த்தி, ராஜா ஆகியோரை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான சக்கரவர்த்தி கைது செய்யப்பட்ட பின்னர் கொலைக்கான உண்மை காரணம் வெளியாகும் என்று தெரிகிறது.