திருச்சுழி அருகே கோவில் சொத்து ஆக்கிரமிப்பு மீட்க கோரி கலெக்டரிடம் மனு


திருச்சுழி அருகே கோவில் சொத்து ஆக்கிரமிப்பு மீட்க கோரி கலெக்டரிடம் மனு
x
தினத்தந்தி 7 Aug 2017 10:30 PM GMT (Updated: 7 Aug 2017 7:43 PM GMT)

விருதுநகர் பிள்ளயைர்குளம் கிராமத்தில் ஆதிதிராவிடர் மக்களுக்கு சொந்தமான கோவிலுக்குரிய நிலங்கள் ஆக்கிரமிப்பு செய்து உள்ளதாகவும் அதை மீட்டு தரும்படி அந்த கிராமத்தை சோர்ந்தவர்கள் கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளனர்.

விருதுநகர்,

திருச்சுழி அருகே உள்ள பிள்ளையார்குளம் கிராமத்தை சேர்ந்த பாலு, முத்துக்கிருஷ்ணன், பெரியசாமி ஆகியோர் நேற்று காலை விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலந்து கொண்டு கலெக்டர் சிவஞானத்திடம் ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:–

ஆதிதிராவிடர் சமூகத்தை சேர்ந்த நாங்கள் பல தலைமுறைகளாக பிள்ளையார்குளம் கிராமத்தில் வசித்து வருகிறோம். எங்கள் கிராமத்தை சேர்ந்தவர்களின் பலர் விவசாய கூலி வேலை தான் செய்து வருகிறார்கள். எங்கள் கிராமத்துக்கு சொந்தமான பொய் சொல்லாத மெய் சொல்லும் அய்யனார் கோவில் உள்ளது. இந்த கோவிலில் முதல் மரியாதை மற்றும் விபூதி பெறும் முதல் உரிமை எங்களுக்கு மட்டும் தான் இருந்தது.

ஆனால் கடந்த சில ஆண்டுகளாக எங்கள் கிராமத்தில் வசித்து வரும் மாற்று சமூகத்தை சேர்ந்தவர்கள் திருவிழாக்காலங்களில் எங்களுக்கு கிடைத்து வந்த முதல் மரியாதையை கொடுக்க மறுத்துவருகிறார்கள். மேலும் கோவிலுக்கு சொந்தமான நஞ்சை நிலங்களை ஆக்கிரமித் துள்ளனர். மேலும் எங்கள் குடியிருப்பு பகுதிகளையும் ஆக்கிரமித்து வீடு கட்டி உள்ளனர். அந்த பகுதியில் உள்ள காலி இடங்களில் வளர்ந்த புளியமரம் மற்றும் சீமைக்கருவேல மரங்களை வெட்டி அப்புறப்படுத்தி உள்ளனர்.

மேலும் அதே பகுதியில் உள்ள முனியாண்டி கோவிலுக்கு சொந்தமான சுமார் 6 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்துள்ளனர். அதே போல் எங்களுக்கு சொந்தமான மயானத்தின் அருகில் உள்ள இடங்களையும் ஆக்கிரமித்துள்ளனர். இது குறித்து கடந்த மாதம் 24–ந்தேதி கலெக்டர் அலுவலகம் வந்து புகார் மனு கொடுத்தோம். ஆனால் அந்த புகார் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே எங்களுக்கு கோவிலில் முதல் மரியாதை வழங்க வேண்டும். மேலும் ஆக்கிரமிக்கப்பட்ட கோவில் நிலம் மற்றும் பட்டா சொத்துக்களை மீட்டு தர வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.


Next Story