டாஸ்மாக் கடைகளில் பணம் கேட்டு மிரட்டுவதாக எம்.எல்.ஏ. மீது பரபரப்பு புகார்


டாஸ்மாக் கடைகளில் பணம் கேட்டு மிரட்டுவதாக எம்.எல்.ஏ. மீது பரபரப்பு புகார்
x
தினத்தந்தி 7 Aug 2017 10:30 PM GMT (Updated: 7 Aug 2017 8:12 PM GMT)

ஈரோட்டில் டாஸ்மாக் கடைகளில் பணம் கேட்டு மிரட்டுவதாக எம்.எல்.ஏ. மீது கலெக்டரிடம் தொழிற்சங்கத்தினர் பரபரப்பு புகார் அளித்தனர்.

ஈரோடு,

டாஸ்மாக் அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவினர் ஈரோடு மாவட்ட கலெக்டர் முகாம் அலுவலகத்திற்கு நேற்று காலை புகார் மனு கொடுக்க வந்தனர். அவர்கள் மாவட்ட கலெக்டர் எஸ்.பிரபாகரை சந்தித்து கொடுத்த மனுவில் கூறிஇருந்ததாவது:–

ஈரோடு மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளில் பணியாற்றி வரும் ஊழியர்கள் அதிகமான பணிச்சுமைக்கும், சிரமங்களுக்கும் இடையே வேலை செய்கிறார்கள். இந்த நிலையில் ஈரோடு மேற்கு, கிழக்கு சட்டமன்ற தொகுதிகளில் செயல்படும் டாஸ்மாக் கடைகளின் மேற்பார்வையாளர்களை கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு மேற்கு தொகுதி கே.வி.ராமலிங்கம் எம்.எல்.ஏ. தனது அலுவலகத்திற்கு அழைத்து பேசினார். அப்போது கடை ஒன்றுக்கு தினசரி ரூ.700 வீதம் மாதந்தோறும் ரூ.21 ஆயிரம் கொடுக்க வேண்டும் என்று தெரிவித்தார். ஆனால் பணம் கொடுக்க முடியாது என்று மேற்பார்வையாளர்கள் கூறினார்கள்.

கடந்த 3–ந் தேதி ஈரோட்டில் உள்ள சில டாஸ்மாக் கடைகளுக்கு சிலர் சென்று எம்.எல்.ஏ. அலுவலகத்திற்கு தரவேண்டிய பணத்தை கொடுக்குமாறு மிரட்டினார்கள்.

அதற்கு பணம் கொடுக்க முடியாது என்று கடையின் ஊழியர்கள் கூறினார்கள். இதைத்தொடர்ந்து 4–ந் தேதி சிலர் கும்பலாக கடைகளுக்கு சென்று ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு மிரட்டல் விடுத்தனர். இதுகுறித்து ஈரோடு சூரம்பட்டி, தாலுகா ஆகிய போலீஸ் நிலையங்களில் சம்பந்தப்பட்ட கடையின் ஊழியர்களால் புகார் செய்யப்பட்டது. மாவட்ட மேலாளருக்கும் தொலைபேசி மூலமாக தகவல் தெரிவிக்கப்பட்டது. மாவட்ட டாஸ்மாக் நிர்வாகம் தலையிட்டு கடை ஊழியர்களிடம் பணம் கேட்டு தொல்லை கொடுப்பதை தடுத்து நிறுத்துவதற்கான எந்தவொரு முயற்சியும் செய்யப்படவில்லை.

எனவே இந்த பிரச்சினையை தீர்க்க மாவட்ட நிர்வாகம் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறிஇருந்தனர்.


Next Story