விருத்தாசலத்தில் மாட்டு வண்டி தொழிலாளர்கள் மனு கொடுக்கும் போராட்டம்


விருத்தாசலத்தில் மாட்டு வண்டி தொழிலாளர்கள் மனு கொடுக்கும் போராட்டம்
x
தினத்தந்தி 7 Aug 2017 10:30 PM GMT (Updated: 7 Aug 2017 8:33 PM GMT)

அரசு மணல் குவாரிகளை திறக்கக்கோரி விருத்தாசலம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மாட்டு வண்டி தொழிலாளர்கள் மனு கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விருத்தாசலம்,

விருத்தாசலம் பகுதியில் மணிமுக்தாறு மற்றும் வெள்ளாறு செல்கிறது. இந்த ஆறுகளில் பல்வேறு இடங்களில் அரசு மாட்டு வண்டி மணல் குவாரிகள் இயங்கி வந்தன. இந்நிலையில் தற்போது மணல் குவாரிகள் மூடப்பட்டன. மேலும் இதையும் மீறி மணல் அள்ளி வரும் மாட்டு வண்டிகள் பறிமுதல் செய்து அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. இதனை கண்டித்தும் மணல் குவாரிகளை திறக்கக்கோரியும் மாட்டு வண்டி தொழிலாளர்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர். இருப்பினும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை.

இதனால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் மீண்டும் மாட்டு வண்டிகளில் மணல் அள்ள அனுமதி வழங்கக்கோரி மாட்டு வண்டிகளுடன் கோட்டாட்சியர் அலுவலகத்துக்கு சென்று மனு கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்திருந்தனர். ஆனால் மாட்டு வண்டிகளுடன் தொழிலாளர்கள் கோட்டாட்சியர் அலுவலகத்துக்கு செல்ல விருத்தாசலம் போலீசார் அனுமதி மறுத்தனர்.

இதையடுத்து நேற்று காலையில் தொழிலாளர்கள் தங்களது மாட்டு வண்டிகளை விருத்தாசலம் புறவழிச்சாலையில் அய்யனார் கோவில் அருகே நிறுத்தினர். பின்னர் வெற்றிவேல் தலைமையில் தொழிலாளர்கள் அங்கிருந்து பேரணியாக கோட்டாட்சியர் அலுவலகத்துக்கு சென்றனர். அப்போது அவர்கள் மணல் குவாரிகளை திறக்கக்கோரி கோ‌ஷங்கள் எழுப்பினர். பின்னர் அவர்கள் கோட்டாட்சியர்(பொறுப்பு) தங்கவேலுவிடம் மனுகொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். மனுவை பெற்றுக்கொண்ட கோட்டாட்சியர் தங்கவேல் இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இதையேற்று தொழிலாளர்கள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.


Next Story