காதல் திருமணத்தை தடுத்து நிறுத்தி கொடைக்கானலில் இருந்து இரோம் சர்மிளாவை வெளியேற்ற வேண்டும்


காதல் திருமணத்தை தடுத்து நிறுத்தி கொடைக்கானலில் இருந்து இரோம் சர்மிளாவை வெளியேற்ற வேண்டும்
x
தினத்தந்தி 8 Aug 2017 4:15 AM IST (Updated: 8 Aug 2017 2:16 AM IST)
t-max-icont-min-icon

இரோம் சர்மிளாவின் காதல் திருமணத்தை தடுத்து நிறுத்தி, கொடைக்கானலில் இருந்து அவரை வெளியேற்ற வேண்டும் என்று சார் பதிவாளர் அலுவலகத்தில் ஆதிவாசி மக்கள் மனு கொடுத்துள்ளனர்.

கொடைக்கானல்,

மணிப்பூர் மாநில சமூக போராளி இரோம் சர்மிளா, கொடைக்கானலில் தங்கியுள்ளார். இவர், தனது காதலர் தேஸ்மந்த் கொட்டிகோவை திருமணம் செய்ய உள்ளார். இதற்காக கொடைக்கானல் சார் பதிவாளர் அலுவலகத்தில் கடந்த மாதம் 12–ந்தேதி மனு அளித்தார். ஆனால் இவருடைய திருமணத்துக்கு எதிர்ப்பு வலுத்து வருகிறது.

திருமணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஏற்கனவே இந்து மக்கள் கட்சி, உழவர் உழைப்பாளர் சங்கம் சார்பில் சார் பதிவாளர் அலுவலகத்தில் மனு கொடுக்கப்பட்டது.

இந்தநிலையில் கொடைக்கானலில் உள்ள பாரதி அண்ணாநகர், பாலமலை, சாம்பக்காடு கிராமத்தை சேர்ந்த ஆதிவாசி மக்கள் கொடைக்கானல் சார் பதிவாளர் அலுவகத்தில் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:–

கடந்த 2007–ம் ஆண்டில் இருந்து மாவோயிஸ்டு நடமாட்டத்தினால் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளோம். தற்போது இரோம் சர்மிளா எங்களுக்காக போராடுவேன் என்று கூறி கொடைக்கானலில் கலவரத்தை ஏற்படுத்த முயற்சி செய்து வருகிறார். இவர் போராடுவதற்கு ஆதிவாசிகளை பயன்படுத்த வேண்டாம்.

இவர் போராட வேண்டும் என்று விரும்பினால் அவரது மாநிலமான மணிப்பூருக்கு சென்று போராடட்டும். இங்கே இவருக்கு திருமணம் நடைபெற்றால் கொடைக்கானல் கலவர பூமியாகும். ஆகவே அவருக்கு நடக்க இருக்கும் திருமணத்தை நிறுத்தி, கொடைக்கானலை விட்டு அவரை வெளியேற்ற வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

ஆதிவாசிகளுக்காக போராடுவேன் என்று கூறிய இரோம் சர்மிளாவை எதிர்த்து அந்த மக்களே மனு கொடுத்திருப்பதால் கொடைக்கானலில் பரபரப்பு நிலவி வருகிறது.


Next Story