மண்எண்ணெய் கேனுடன் வந்த பெண்; அம்மா உணவகத்தில் வேலை வழங்கக் கோரி மனு கொடுத்தார்


மண்எண்ணெய் கேனுடன் வந்த பெண்; அம்மா உணவகத்தில் வேலை வழங்கக் கோரி மனு கொடுத்தார்
x
தினத்தந்தி 8 Aug 2017 4:30 AM IST (Updated: 8 Aug 2017 3:05 AM IST)
t-max-icont-min-icon

அம்மா உணவகத்தில் வேலை வழங்கக்கோரி சேலம் கலெக்டர் அலுவலகத்திற்கு மண்எண்ணெய் கேனுடன் வந்த பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.

சேலம்,

சேலம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு கலெக்டர் சம்பத் தலைமை தாங்கினார். சேலம் அம்மாபேட்டை ஜோதி மெயின் ரோட்டை சேர்ந்தவர் செல்வராணி(வயது 48). இவர் நேற்று கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். அப்போது கலெக்டர் அலுவலகத்தின் நுழைவாசலில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர் வைத்திருந்த பையை சோதனை செய்தனர்.

அப்போது அந்த பையில் இருந்த பாட்டிலில் மண்எண்ணெய் மறைத்து வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் அதை பறிமுதல் செய்து செல்வராணியிடம் விசாரணை நடத்தினர். பின்னர் இதுகுறித்து அவர் கூறியதாவது:– கடந்த 7 ஆண்டுகளாக நான் கணவரை பிரிந்து வாழ்கிறேன். நான் அம்மாபேட்டையில் உள்ள அம்மா உணவகத்தில் சமையலராக வேலை செய்து வந்தேன். இந்தநிலையில் எனக்கு உடல்நலம் சரியில்லாத காரணத்தினால் 72 நாட்கள் விடுமுறை எடுத்தேன். பின்னர் கடந்த ஜூன் மாதம் மருத்துவ சான்றிதழுடன் மீண்டும் வேலைக்கு சென்றேன்.

அப்போது அங்கிருந்தவர்கள், உன்னை வேலையைவிட்டு நீக்கியதாகவும், அதற்கு பதிலாக வேறு ஒருவரை நியமனம் செய்துவிட்டதாகவும் கூறினார்கள். இதனால் தற்போது வருமானம் இன்றி குடும்பம் நடத்த கஷ்டப்பட்டு வருகிறேன். அதே வேலையை மீண்டும் வழங்கக்கோரி அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை. இதனால் மனவேதனையில் இருந்த நான் தற்கொலை செய்யும் நோக்கத்தில் மண்எண்ணெய் கேனுடன் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தேன். இவ்வாறு அவர் கூறினார்.

இதைத்தொடர்ந்து அவர், அம்மா உணவகத்தில் வேலை வழங்கக்கோரி கலெக்டரிடம் மனு கொடுத்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.


Next Story